‘ரீல்ஸ்’ என்ற பெயரில் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடனம் ஆடுதல், ‘பிராங்க்’ வீடியோக்களை எடுத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக வலைதளங்கள் மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலகளவில் நடக்கும் செய்திகளை தெரிந்து கொள்ளவும், நண்பர்கள், உறவினர்களுடன் கலந்துரையாடவும், தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்ட்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மிகவும் உதவி வருகின்றன.

மறுபுறம் இன்ஸ்ட்டாகிராம் ரீல்ஸ், யூ டியூப் போன்ற சமூகவலைதளங்களில் அதிக பார்வையாளர்களை பெற்று அதிலிருந்து வருமானம் ஈட்டவும் முடியும். சிலர் அதிக பார்வையாளர்களை பெறும் நோக்கத்தில் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், மால் உள்ளிட்ட பல இடங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுக்கும் பெயரில் நடனம் ஆடுதல், பொதுமக்களிடம் பிராங்க் (குறும்பு) செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, பூங்காக்களில் நடைபயிற்சி செய்வோருக்கு இடையூறாக வழியை மறித்து வீடியோ எடுக்கின்றனர். இதுபோன்ற செயல்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயமுத்தூர் அமைப்பின் தலைவர் ஜெயராமன் கூறியதாவது: பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் தவறானது. ரீல்ஸ், பிராங்க் வீடியோக்கள் என்ற பெயரில் ஆபாசமாக பொது இடங்களில் நடனமாடுவது கலாச்சார சீரழிவாகும். பிராங்க் வீடியோக்களை எடுப்பவர்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமான முறையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பேருந்து, உணவகம் உள்ளிட்ட பொது இடங்களில் மொபைல்போன் பயன்படுத்துவோர் அதிக சத்தத்துடன் ரீல்ஸ் வீடியோக்கள், யூ டியூப் வீடியோக்களை பார்ப்பது, கேம் என்ற பெயரில் ஒரு குழுவாக அமர்ந்துகொண்டு சத்தமிட்டு மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. பேருந்து உள்ளிட்ட பொது இடங்களில் மொபைல்போன் பயன்படுத்தும்போது ‘ஹெட்செட்’ அணிவதை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காவல் ஆணையர் எச்சரிக்கை: இதுதொடர்பாக, கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, “பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ், பிராங்க் வீடியோக்களை எடுப்பது தவறு. கடந்த 6 மாதங்களுக்கு முன் சில சமூகவலைதளங்கள் மற்றும் அதை நிர்வகித்து வந்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிராங்க் வீடியோக்களாக இருந்தாலும், ரீல்ஸ் என்ற பெயரில் மற்றவர்களை வைத்து வீடியோ எடுத்தாலும் சம்பந்தப்பட்ட நபரிடம் முன்அனுமதி பெற வேண்டியது அவசியம். அதே போல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது. மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்படுவோர் காவல்துறையில் புகார் அளிக்கலாம்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *