மும்பை: இங்கிலாந்து வீரர்கள் பாஸ்பால் அணுகுமுறையைப் பயன்படுத்தினால் 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விக்கெட்களைக் குவிப்பேன் என்று இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் நகரில் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தொடர் குறித்து ஜஸ்பிரீத் பும்ரா கூறியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் சமீபகாலமாக `பாஸ்பால்’ எனப்படும் வேகமாகவிளையாடி ரன்களைக் குவிக்கும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இங்கிலாந்தின் ‘பாஸ்பால்’ அணுகுமுறையுடன் நான் என்னை தொடர்புபடுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், அது உற்சாகமாகத்தான் இருக்கிறது. இதனால் பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட் வீழ்த்த அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஏனெனில் வேகமாக அவர்கள் ரன்கள் எடுக்க முயற்சிக்கும் போது வழக்கத்தை விட பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் நமது அணியை பந்துவீச்சாளர்களால் வெற்றி பெற வைக்க முடியும்.

‘பாஸ்பால்’ அணுகுமுறையை இங்கிலாந்து அணியினர் வெற்றிகரமாக பயன்படுத்துகின்றனர். அந்த அணிவீரர்கள் எதிரணி வீரர்களை ஆக்ரோஷமாக எதிர்கொள்கின்றனர். டெஸ்ட்டை இப்படியும் ஆட முடியும் என்று காட்டுகிறார்கள்.

ஒரு பந்துவீச்சாளராக நான் கூறவருவது என்னவென்றால் இந்த அணுகுமுறை என்னைப் போன்ற பந்து வீச்சாளர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதுதான். அவர்கள் வேகமாக விளையாடுவதன் மூலம்என்னைக் களைப்படையச் செய்ய மாட்டார்கள். அதனால் நான் விக்கெட்டுகளைக் குவிப்பேன். இருப்பினும் இப்படி அதிரடியாக விளையாடுவதற்கான பாராட்டுக்கள் இங்கிலாந்தை சேரும். ஆனால், ஒரு பந்துவீச்சாளராக நான் எப்போதும் ஆட்டத்தில் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *