லண்டன்: இந்திய ஆடுகளங்களில் பந்து வீசுவது இங்கிலாந்து பவுலர்களுக்கு சவாலாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் அணியின் பவுலர்களுக்கு இந்தியாவில் பந்து வீசுவது குறித்த நுட்பத்தை தான் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் 25-ம் தேதி இந்த தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ளது. ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தரம்சாலாவில் உள்ள மைதானங்களில் இந்த தொடரின் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள அணிக்கு வேண்டிய தகவல்களை பகிரும் கடமை எனக்கு உள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு பந்து வீசாத பவுலர்கள் எங்கள் அணியில் உள்ளனர். அதனால் அது எங்களுக்கு மாறுபட்ட சவாலாக இருக்கும். அணிக்கு தேவையான நேரத்தில் உதவுவது அவசியம். இங்கிலாந்தில் பந்து வீசுவது போல வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் அதிக ஓவர்கள் வீச முடியாது. ஆனால், இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஓவர்களும் முக்கியம். அதை கருத்தில் கொள்வோம்.

நான் எனது வயது காரணமாக ஓய்வு பெற விரும்பவில்லை. அணிக்காக வெற்றி தேடி தரும் திறன் என்னிடம் உள்ளது என கருதுகிறேன்” என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

41 வயதான ஆண்டர்சன், இங்கிலாந்து அணிக்காக 183 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2003 முதல் விளையாடி வரும் அவர் இதுவரை 690 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பவுலர்களில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். இந்தியாவுக்கு 6-வது முறையாக அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதுவரை இந்தியாவில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *