சென்னை: சென்னையில் முக்கியமான புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்றான மூர்மார்க்கெட் வளாக ரயில் நிலையத்தில் பெரிய டிஜிட்டல் காட்சி பலகை இல்லாததால், ரயில்கள் தொடர்பான தகவலை அறிய முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். எனவே, பெரிய டிஜிட்டல் காட்சி பலகையை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் பொது போக்குவரத்தில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து மையமாக இருக்கிறது. புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தை பொருத்தவரை, சென்னை கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடம், சென்னை சென்ட்ரல்–திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 670 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இவற்றில், சென்ட்ரல்–ஆவடி, திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இந்த ரயில்கள் சென்னை சென்ட்ரலில் உள்ள மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன. இந்த நிலையத்தில் இருந்து 15 முதல் 20 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த ரயில் நிலையத்தின் பிரதான பகுதியில் பெரிய டிஜிட்டல் காட்சி பலகை அமைக்கப்பட்டு மின்சார ரயில்கள் தொடர்பான விவரங்கள், நடைமேடை தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதனால், இந்த டிஜிட்டல் காட்சி பலகை பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருந்து வந்தது. ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்புகள் செய்யப்பட்டாலும், இந்த டிஜிட்டல் காட்சி பலகையை நம்பியே பெரும்பாலான பயணிகள் இருந்தனர்.

சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாக ரயில் நிலையத்தில் பெரிய

டிஜிட்டல் காட்சி பலகை அகற்றப்பட்டு, சிறிய எல்இடி டிவிகள் மட்டும் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த பெரிய டிஜிட்டல் காட்சி பலகை கடந்த மாதம் திடீரென அகற்றப்பட்டது. மாறாக, நிலையத்தின் வலது, இடது புறத்தில் சிறிய எல்இடி டிவி பொருத்தப்பட்டுள்ளது. இது, ரயில் நிலையத்துக்கு வழக்கமாக வந்து செல்லும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்களில் வந்து பணியை முடித்து மாலையில் ரயில் நிலையத்துக்குள் நுழையும் பயணிகளுக்கு பெரிய டிஜிட்டல் காட்சி பலகையே மிகவும் உதவியாக இருந்து வந்தது. தற்போது, அந்த டிஜிட்டல் காட்சி பலகை இல்லாததால், பயணிகள் ரயில் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சிறிய எல்இடி டிவியில் தகவல் அறிய அதன் அருகே சென்றுதான் பார்க்க வேண்டி உள்ளது. எனவே, உடனடியாக, பெரிய டிஜிட்டல் காட்சி பலகையை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொன்னேரியைச் சேர்ந்த ரயில் பயணி பிரதாப் கூறியதாவது: மூர்மார்க்கெட் வளாக ரயில் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக பெரிய டிஜிட்டல் காட்சி பலகை மாயமாகிவிட்டது. இதனால், ரயில்கள் தொடர்பான தகவல் அறிவதில் சிரமத்தை சந்தித்து வருகிறோம். சிறிய எல்இடி டிவியால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. எனவே, பெரிய டிஜிட்டல் காட்சி பலகையை மீண்டும் அமைக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சர்மிளா கூறும்போது, ”நான் வேலை நிமித்தமாக, சென்னைக்கு வந்து செல்கிறேன். மாலை நேரத்தில் வீட்டுக்கு செல்வதற்காக, இந்த நிலையத்துக்குள் அவசரமாக நுழையும் போது, ரயில் மற்றும் நடைமேடை அறிவதில் இந்த பெரிய டிஜிட்டல் காட்சி பலகை பேருதவியாக இருக்கும். தற்போது, இந்த டிஜிட்டல் காட்சி பலகை இல்லாததால், சிரமம் ஏற்படுகிறது. விரைவில் இதை மீண்டும் நிறுவ வேண்டும்” என்றார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்ட்ரல் நிலையம் அருகே உள்ள மூர்மார்க்கெட் வளாகம் (எம்எம்சி) புறநகர் ரயில் நிலையத்தில் இருந்த பிரம்மாண்ட டிஜிட்டல் அறிவிப்புபலகை காலாவதியான காலத்தை எட்டியதால் அகற்றப்பட்டது.

ஒரு டிஜிட்டல் காட்சி பலகைக்கு பதிலாக, மூன்று புதிய டிஜிட்டல் காட்சி பலகைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு டிஜிட்டல் காட்சி பலகைகள், மக்கள் கூடும் பிரதான பகுதியில் நிறுவப்படும். மற்றொன்று, இந்த ரயில் நிலையத்தின் பிரதான நுழைவுவாயிலில் நிறுவப்படும்.

இதுதவிர, புறநகர் ரயில் நிலையங்களில் உள்ள அனைத்து நடைமேடைகளிலும் 50 சிறிய எல்இடி தொலைக்காட்சிகள் நிறுவப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *