இந்திய அணி நிர்வாகத்தினால் அவ்வப்போது கைவிடப்பட்டு பிறகு நெருக்கடி வரும்போது மீண்டும் அணிக்கு அழைக்கப்படும் ஒரு வீரராக மொஹீந்தர் அமர்நாத்துக்கு பிறகு அஜிங்க்ய ரஹானே அறியப்படுகிறார். இந்நிலையில், குறைந்தது 100 டெஸ்ட் போட்டிகளிலாவது விளையாட வேண்டும் என்பதுதான் தன் நோக்கம் என்று தன் ஆசையை அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் தனது 85-வது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பைப் பெற்றார் ரஹானே. இவரை ‘Crisis Man’ என்றே நாம் அழைக்கலாம். ஏனெனில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணி நெருக்கடியில் இருக்கும் போது அருமையான பங்களிப்பு செய்துள்ளார், அதே போல் டெஸ்ட் அணித்தேர்வில் நெருக்கடி ஏற்படும் போதும் ‘சரி ரஹானேவைக் கூப்பிடுங்கள்’ என்று பிசிசிஐ-யின் கடைநிலை தஞ்ச பேட்டராகவும் இருந்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் விராட் கோலி, இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்ப மீதம் ஆடிய 3 டெஸ்ட் போட்டிகளில் 2-ல் வென்று, அதுவும் முன்னணி பவுலர்கள் காயமடைந்த சூழலில் சிராஜ், ஷர்துல் தாக்கூர், நடராஜன், வாஷிங்டன் சுந்தரை வைத்துக் கொண்டு தொடரை 2-1 என்று வென்ற ஒரு வீரரை பிசிசிஐ தேர்வுக்குழு மட்டுமே இப்படிப் புறக்கணிக்க முடியும். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் ரஹானேதான் சிறப்பாக ஆடினார். சூப்பர் ஸ்டார்கள் பின் சீட்டிற்கு செல்லும் போது அணியை தூக்கி நிறுத்தியவர் ரஹானேதான்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பான அதிரடி இன்னிங்ஸ்களை ஆடி வெள்ளைப்பந்திலும் தன் திறமைகளை நிரூபித்தவர். சிறந்த கேப்டன் என்று ரஹானேவின் திறமைகளுக்கு ஏகப்பட்ட சான்றுகளைக் கூற முடியும். இப்போது மும்பையை வழிநடத்தி வருகிறார்.

அவர் நேற்று அளித்த பேட்டியில், “மும்பைக்காக சிறப்பாக ஆட வேண்டும். ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும். இவை எல்லாவற்றையும் விட பெரிய நோக்கம் 100 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே” என்றார்.

தென் ஆப்பிரிக்காவில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தோல்வி தழுவியவுடன் அனைவருக்கும் ரஹானே நினைப்பு வரவே செய்யும். புஜாராவையும் இப்படித்தான் எந்த வித சப்தமும் இன்றி ஒழித்து விட்டனர். புஜாராவுக்கு ஒரு கடைசி பிரியாவிடை போட்டியில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

ரஞ்சி டிராபி ஆடி டெஸ்ட் போட்டிக்குள் மீண்டும் வர வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும் ஒரு சில வீரர்களுள் ரஹானேவும் ஒருவர். ஆனால், டெஸ்ட் அணியாக இருந்தாலும் ஒருநாள், டி20 அணியாக இருந்தாலும் ஐபிஎல் ஆட்டத்தை முன் வைத்து அணித்தேர்வு நடக்கும் நாட்டில் சர்பராஸ் கான்களின் நிலைமைகளே பெஞ்ச் துடைப்பதாக இருக்கும் போது ஏற்கெனவே 85 டெஸ்ட் போட்டிகள் ஆடி உள்ள ரஹானேவின் 100 டெஸ்ட் கனவு நிறைவேறுவது அசாத்தியமே.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *