எண்ணூர் வாயுகசிவு, கேலோ இந்தியா நிகழ்வு, சர்ச்சையான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனிடம் முன்வைத்தேன்.

“தமிழ்நாட்டுக்கு மோடிவரும் போதெல்லாம் கறுப்பு பலூன் விடும் வேல்முருகன், இப்போது எதிர்ப்பைக்கூட பதிவுசெய்வதில்லையே ஏன்?”

“காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துக்கொண்டிருந்த காலம் அது. கோரிக்கையை நிறைவேற்றும் வரை மோடி தமிழ்நாட்டு வந்தபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அதனை அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள். ஆகையால் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. இப்போது பேரிடருக்கான நிதி கொடுக்காமல், ஆணவத்தோடு, திமிரோடு, அகங்காரத்தோடு மத்திய அரசு பேசுவதெல்லாம் ஏற்கத்தக்கதல்ல. ஆகவே நிதி தருவதற்கு முன்பு மோடி தமிழ்நாட்டு வந்தால், `கோ பேக் மோடி’ போராட்டத்தை முன்னெடுப்பேன்.”

உதயநிதி – மோடி சந்திப்பு

“கேலோ இந்தியா போட்டிக்கு மோடியை அழைத்திருக்கிறதே தி.மு.க?”

“கேலோ இந்தியா நிகழ்ச்சிக்கு மோடி அழைக்க வேண்டிய அவசியமில்லை. என்னை கேட்டால் பேரிடரால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்த விளையாட்டு போட்டியை இங்கு நடத்துவதுமே அவசியமற்றது. நிகழ்ச்சிக்காக செலவிடும் தொகையை பயனுள்ளவற்றுக்கு பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து.”

“எண்ணூர் வாயுகசிவால் பாதிக்கப்பட்ட மக்கள், கோரமண்டல் நிறுவனத்தை மூடக் கோரி போராடுகிறார்களே?”

“எங்கள் கட்சியினரும் போராட்டத்தில் இருக்கிறார்கள். கண்டிப்பாக அந்த உரத் தொழிற்சாலை இயங்கக் கூடாதென்பதே என் கருத்து. என்னைப் பொறுத்தவரை இது போன்ற பிரச்னைகளுக்கு, முதலில் அந்த சுற்றுவட்டார மக்களின் கருத்தைக் கேட்க வேண்டியது மிக அவசியம். ஒரு திட்டம் வருவதற்கு முன்பே அப்பகுதி மக்களின் கருத்துகளுக்கு, அரசு செவி கொடுக்க வேண்டும். தற்போது எண்ணூரிலும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது அவசியம். மக்கள் மூடச் சொன்னால் மூடிவிட்டுச் செல்லுங்கள்.”

எண்ணூர் போராட்டம்

“கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சர்ச்சைகள் பற்றி உங்கள் கருத்தென்ன?”

“ முதலில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடும் திட்டமிருந்தால், அதனை அரசு கைவிட வேண்டும். மேலும் பலகோடி பொருள்செலவில் உருவாகும் திட்டம் மக்களுக்கு பயன் தர வேண்டும்… மாறாக மக்களை சிரமப்பட வைக்கக் கூடாது. அதிலும் இனி தென்மாவட்ட பேருந்துகள் கோயம்பேட்டுக்கு வராது என்பதை ஏற்கவே முடியாது. அரசு இம்முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.”

“ஜாமீன் கிடைக்காத செந்தில் பாலாஜி… குற்றவாளியாக பொன்முடி… தி.மு.க-வுக்குப் பின்னடைவுதானே?”

செந்தில் பாலாஜி

“தி.மு.க என்பது 1949-ல் தொடங்கிய மாபெரும் அரசியல் இயக்கம். ஒரு பொன்முடியால்… செந்தில் பாலாஜியால் தி.மு.க-வுக்குப் பின்னடைவா என்றால், இல்லை என்பதே பதில்.”

“நீதிமன்றத் தீர்ப்பை தி.மு.க கூட்டணிக் கட்சியினர் விமர்சிக்கின்றனர்… உங்கள் நிலைப்பாடு என்ன?”

“அது தி.மு.க அமைச்சர் என்றாலும் சரி, அ.தி.மு.க-வினர் என்றாலும் சரி. குற்றவாளி எனக் கூறி தண்டனை வழங்கப்பட்டுவிட்டால், நீதிக்குத் தலைவணங்கித்தான் ஆகவேண்டும்.”

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *