புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஒரு மாத குழந்தையை குடிநீர் தொட்டிக்குள் வீசிக் கொன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

அரிமளம் அருகேயுள்ள கரையப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன் (34). இவருக்கும், நம்பூரணிப்பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும் 2021-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதனிடையே, தம்பதி இருவரும் பிரிந்துவிட்டனர். நம்பூரணிப்பட்டியில் தனது மகள், பெற்றோர் ஆகியோருடன் அந்தப் பெண் வசித்து வருகிறார். மோகனுக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இரண்டாவது திருமணம்: இதனிடையே, அறந்தாங்கி அருகேயுள்ள வயிறிவயலைச் சேர்ந்த செண்பகவள்ளி என்ற கிருத்திகாவை (26), மோகன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், அந்தக் குழந்தை வீட்டின் மேல் மாடியில் உள்ள குடிநீர்த் தொட்டிக்குள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கே.புதுப்பட்டி போலீஸார் நடத்திய விசாரணையில், மோகன் மற்றும் செண்பகவள்ளி ஆகியோர் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்று, குடிநீர் தொட்டிக்குள் வீசியது தெரியவந்தது. தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

முதல் திருமண விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மற்றொரு திருமணம் செய்ததற்கு சாட்சியாக குழந்தை இருந்தால், தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று கருதி குழந்தையைக் கொன்றதாக மோகன், செண்பகவள்ளி ஆகியோர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *