தென்காசி: தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுப் பணத்தை தராததால், 80 வயது தாயைக் கொன்ற தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மனைவி சிவந்திப்பூ (80). இவரது மகன்கள், மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. கணவர் இறந்துவிட்டதால், சிவந்திப்பூ தனியாக வசித்து வந்தார்.

இவரது மூத்த மகன் முருகன் (50). தொழிலாளியான இவர் தனது தாயாரிடம் செலவுக்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை சிவந்திப்பூ நேற்று ரேஷன் கடையில் பெற்றுக் கொண்டு, வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த முருகன், அரசு வழங்கிய ரூ.1,000 பணத்தைக் கேட்டு, தாயாரிடம் தகராறு செய்துள்ளார்.

கல்லை தூக்கிபோட்டு… பணத்தைக் கொடுக்க மூதாட்டி சிவந்திப்பூ மறுத்ததால், அம்மிக்கல்லைத் தூக்கி அவரது தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிவந்திப்பூ, அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த பாவூர்சத்திரம் போலீஸார் மூதாட்டி சிவந்திப்பூ சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கொலை வழக்கு பதிவு செய்து, முருகனை கைதுசெய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன், பின்னர்சிறையில் அடைக்கப்பட்டார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *