வேலூரில், பா.ம.க சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புத் தொடர்பான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இதில் கலந்துகொண்டார். அன்புமணி பேசுகையில், ‘‘44 ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவருகிறோம். இன்னமும் நமக்கு சமூகநீதி கிடைக்கவில்லை. ‘சாதி’ என்ற பெயர் பிடிக்கவில்லையா… ‘சமூகநீதி கணக்கெடுப்பு’ என்றோ, அல்லது ‘தமிழ்நாடு மக்கள் நிலைக் கணக்கெடுப்பு’ என்றோ மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். பெயர் எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் கேட்பது, தமிழ்நாட்டிலுள்ள 2.3 கோடி குடும்பங்களின் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, சுற்றுச்சூழல் நிலை, சுகாதார நிலைப் போன்றவற்றைக் கண்டறியச் சொல்கிறோம். கணக்கெடுத்தால் மட்டுமே அதற்கேற்ப வியூகங்கள் அமைக்கப்பட்டு, நலத்திட்டங்கள், இட ஒதுக்கீடு, பங்கீடு, சலுகைகளைக் கொடுக்க முடியும். இதைத்தான் ‘மைக்ரோ பிளானிங்’ என்கிறோம். இதைச் செய்தால் மட்டுமே தமிழ்நாடு முன்னேற்றமடையும். ஐ.டி காரிடார், பெரியப் பெரிய தொழிற்பேட்டைகள் என எதுக் கொண்டுவந்தாலும் தமிழ்நாடு முன்னேற்றமடையாது.

அன்புமணி

இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சாதியை வைத்துதான் அடக்குமுறைகளைச் செய்கிறார்கள். இன்னமும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மேல்சாதி, கீழ்சாதி என அந்தக் காலத்திலேயே பிரித்துவிட்டார்கள். இங்கு இருக்கின்ற கீழ்சாதி முன்னுக்கு வருவதுதான் சமூகநீதி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கீழ்சாதி என்று யாருமே கிடையாது. எல்லோருமே உழைக்கின்ற சாதிகள்தான். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடிமையாக்கப்பட்ட சாதிகளெல்லாம் முன்னுக்கு வரவேண்டும். அதுதான் சமூகநீதி. இந்தியாவில் இட ஒதுக்கீட்டு முறை சாதி அடிப்படையில்தானே வழங்கப்படுகிறது. மத அடிப்படையிலோ, இனம் அடிப்படையிலோ, மாநிலங்களின் அடிப்படையிலோ கிடையாது அல்லவா… ஒரு பிரச்னைக்கு விஞ்ஞான அடிப்படையில்தான் தீர்வுக் காண வேண்டும். என்னென்ன சாதி, எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்று தலைகளை எண்ணச் சொல்லவில்லை. எங்களுக்கு அது அவசியமும் கிடையாது.

தமிழ்நாட்டின் 13 விழுக்காடு குடிசைகள் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்றன. வன்னியர்களும், பட்டியல் சமூகத்துவரும்தான் பெரும்பான்மையாக அந்த மாவட்டத்தில் வசிக்கிறார்கள். இதற்கு என்னத் தீர்வு… பட்டியல் சமுதாயத்தில் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. அதில், ஆதி திராவிடர், தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர் என மூன்று பெரிய சமூகங்கள் இருக்கின்றன. அருந்ததியர் சமூகத்துக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க குரல் கொடுத்து, அறிவிக்கச் செய்ததும் பா.ம.க-தான். இஸ்லாமியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை கொடுக்க வைத்ததும் பா.ம.க-தான். ஏதோ, வன்னியர் சமூகத்துக்காக மட்டுமே பேசவில்லை. எல்லா சமுதாயமும் முன்னேற வேண்டும். மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் என்னத் தயக்கம்… இன்றையக் காலக்கட்டத்தில் அவசியமானதும்கூட. இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை.

முதலமைச்சரைச் சுற்றியிருக்கிற சில அதிகாரிகளும், மற்ற மந்திரிகளும் தவறாக அவரை வழிநடத்துகிறார்கள். வேறு எந்தக் காரணமும் கிடையாது. ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், கூட்டணியில் நிறைய சீட்டு கேட்பார்கள்’ என்று நினைக்கிறார்கள். இதற்கும், கூட்டணிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. மக்களை ஏமாற்றுகிறார்கள்.

அன்புமணி

‘தமிழ்நாடு சமூகநீதியின் பிறப்பிடம்’ என்று இனியும் வசனம் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. ‘தந்தைப் பெரியாரின் வாரிசு’ என்று இனிமேலும் பேசாதீர்கள். அப்படிச் சொல்ல உங்களுக்குத் தகுதியில்லை. இந்தக் காலம் வேறு. இளைஞர்கள் விவரமாக இருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் சாதியை வைத்துதான் அரசியல் செய்கின்றன. ஆனால், அந்தச் சாதிகளுக்கு எதையும் செய்ய மாட்டார்கள். இனியும், முதலமைச்சர் ஏமாற்றக் கூடாது. டீசன்ட்டாக கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களை வீதியில் இறக்கிவிடாதீர்கள். நாடு தாங்காது. இந்த கருத்தரங்கு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுபற்றி சிலப் பேருக்குத் தெரியவில்லை. ‘அன்புமணி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தணும்னு சொல்றார். அவர் எப்ப பார்த்தாலும் சாதியைப் பத்திதான் பேசுறார். வேறு எதையும் பேச மாட்டாரா?’ என்று சிலப் பேர் பதிவிடுகிறார்கள். அவர்களுக்கு சமூகநீதிப் பற்றித் தெரியவில்லை. எங்களுக்குப் போராட்ட வரலாறு உண்டு. இது, அரசியல் மேடையும் கிடையாது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்’’ என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *