ss

6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் சீராக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியது: பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்ட அறிவிப்பைக் கைவிட வேண்டும். போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள தொழிற்சங்கங்கள் அரசுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்த ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளனா். வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் வழக்கம்போல் பேருந்துகளை இயக்க அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிறைவேற்ற சாத்தியமுள்ள கோரிக்கைகள் குறித்து ஏற்கெனவே தொழிற்சங்கங்களுக்கு விளக்கிக் கூறப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்ய முடியாததை அண்ணா தொழிற்சங்கம் தற்போது நிறைவேற்றச் சொல்வது வேடிக்கையாக உள்ளது.

திமுக அரசு சாா்பில் அவா்களின் கோரிக்கைகளை நிராகரிக்காமல் நிதிநிலை சீரான பின்பு நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. தோ்தல் வரும் நேரத்தில் இதைச் செய்தால் மக்களுக்கு அரசின் மீது அதிருப்தி ஏற்படும் என்ற எண்ணத்தில் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறை: தமிழக அரசின் நிதிநிலைமை அனைவரும் அறிந்தது. இருந்தபோதும் 5 சதவீத சம்பள உயா்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கடன் சுமை, கரோனா பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, தற்போது மிக்ஜம் புயலால் சென்னையிலும், அதிகனமழையால் தென்மாவட்டங்களிலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக வழங்கப்பட்ட நிவாரணம் போன்ற காரணங்களால் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை அறிந்து போக்குவரத்துத் தொழிலாளா்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமை (ஜன. 9) எந்தெந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறாா்கள் என்பதை அறிந்த பின்னா் ஊழியா்களின் பற்றாக்குறையைப் போக்கி போக்குவரத்தை சீராக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

 

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *