Loading

சென்னை: அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, வெள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று (டிச.21) காலை சென்ற முதல்வர் தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, வெள்ள சேத விவரங்களை கேட்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். செயின்ட் மேரிஸ் பள்ளியில் உள்ள நிவாரண மையத்துக்கு சென்று முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, எட்டையபுரம் 3-வது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், குறிஞ்சி நகர் போல்பேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியையும் பார்வையிட்டு, சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியினை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக இன்று மாலை, தமிழக முதல்வர் திருநெல்வேலி சென்றடைந்தார். திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஆறுதல் கூறி, அவர்களுக்கு முகாம்களில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்து, முகாம்களில் தங்கியுள்ள சுமார் 1000 நபர்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை, போர்வை, பாய், பிஸ்கட் மற்றும் ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

அப்போது, ஆட்டோ ஓட்டுநர் பாலசுப்பிரமணியம் என்பவரின் இரண்டாம் வகுப்பு பயிலும் மகள் செல்வி சேவிதா பகவதி தனது உண்டியல் சேமிப்பு பணத்தை நிவாரணப் பணிகளுக்காக முதல்வரிடம் வழங்கினார். இச்சிறுமியை முதல்வர் பாராட்டி வாழ்த்தினார். திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க பெறப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களின் விவரங்களை தமிழக முதல்வர் கேட்டறிந்தார்.

இந்த வர்த்தக மையத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இதுநாள் வரை பெறப்பட்ட நிவாரணப் பொருட்களான 14,010 கிலோ அரிசி, 3195 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, 6050 லிட்டர் பால், 4590 கிலோ பால் பவுடர், 5761 பிஸ்கட்,ரொட்டி,ரஸ்க், 5136 லிட்டர் சமையல் எண்ணெய், 43,416 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 93,666 இதர அத்தியாவசியப் பொருட்களான தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, கொசுவத்தி சுருள், போர்வை, பாய், துண்டு மற்றும் நாப்கின் போன்ற நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, இவற்றில் 91 சதவிகித பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று அரசு உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது, மா சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சா. ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வஹாப், ரூபி மனோகரன், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.செல்வராஜ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப. கார்த்திகேயன், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *