திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீப கொப்பரைக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், மலை உச்சிக்கு கொப்பரை கொண்டுசெல்லப்பட்டது.

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல்தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 14-ம் தேதி இரவு தொடங்கியது. தொடர்ந்து பிடாரி அம்மன், விநாயகர் உற்சவம் நிறைவு பெற்றதும், மூலவர் சந்நிதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 17-ம் தேதி கொடிஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மகா தீபம் இன்று (நவ. 26) மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது. 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், 5 அடி உயரமுள்ள கொப்பரையில் நெய் நிரப்பி, காடா துணி மூலம் மகா தீபத்தை பருவதராஜகுல வம்சத்தினர் ஏற்ற உள்ளனர்.

இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் மகாதீப கொப்பரைக்கு நேற்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, அண்ணாமலையின் உச்சிக்கு கொப்பரை கொண்டுசெல்லப்பட்டது. அப்போது பக்தர்கள் `அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கமிட்டனர்.

மகா தீப கொப்பரையில், ஆண்-பெண் சமம் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் அர்த்தநாரீஸ்வரர் படம் வரையப்பட்டுள்ளது. மகாதீபத்தை தொடர்ந்து 11 நாட்களுக்கு தரிசனம் செய்யலாம். டிசம்பர் 7-ம் தேதி மலை உச்சியில் இருந்து கோயிலுக்கு கொப்பரை கொண்டு வரப்பட்டு, சிறப்புபூஜை செய்யப்படும். மகா தீபகொப்பரையில் சேகரிக்கப்படும் ‘கரு மை’ ஆரூத்ரா தரிசனத்தின்போது நடராஜருக்கு சாத்தப்படும். பின்னர் பக்தர்களுக்கு கரு மை பிரசாதம் வழங்கப்படும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *