மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், வரும் 17-ம் தேதி ஒரே கட்டமாக மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சட்டசபைத் தேர்தல் நடக்கும் என்றும், இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் விதிஷா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “2018-ம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 114 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்து, பா.ஜ.க-வைப் புறக்கணித்தீர்கள். ஆனால், பிரதமர் மோடி, சிவராஜ் சிங் சௌஹான், அமித் ஷா ஆகியோர் சேர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் திருடினார்கள். கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியதன் மூலம், உங்கள் முடிவை, உங்கள் இதயத்தின் குரலை பிரதமர் மோடி நசுக்கி, உங்களுக்குத் துரோகம் செய்துவிட்டார். அதனால்தான் நாங்கள் பா.ஜ.க-வுடன் போராடுகிறோம்.