புதுடெல்லி: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நாளை மறுநாள் (நவ.16) நடைபெறும் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

இது தொடர்பாக அரசு தரப்பு வெளியிட்ட தகவல்: இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நவம்பர் 16 முதல் 17 வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் இந்த சந்திப்பின்போது, பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் மன்றத்தில் உரையாற்றுகிறார். இந்தோனேசியா, ஏ.டி.எம்.எம்-பிளஸ் தலைவராக இருப்பதால் இந்தக் கூட்டத்தை அந்நாடு நடத்துகிறது.

ஏ.டி.எம்.எம்-பிளஸ் மாநாட்டின் போது, ராஜ்நாத் சிங், பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார். பரஸ்பர இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பாதுகாப்பு ஒத்துழைப்பு விஷயங்கள் குறித்து விவாதிப்பார். ஏ.டி.எம்.எம் என்பது ஆசியான் அமைப்பில் உள்ள நாடுகளின் மிக உயர்ந்த பாதுகாப்பு ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பாகும். ஆசியான் உறுப்பு நாடுகளான புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் அதன் எட்டு உரையாடல் கூட்டாளிகளான இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக ஏ.டி.எம்.எம்-பிளஸ் உள்ளது.

1992-ஆம் ஆண்டில் ஆசியான் அமைப்பின் உரையாடல் கூட்டாளியாக இந்தியா மாறியது. அக்டோபர் 12, 2010 அன்று வியட்நாமின் ஹனோயில் முதல் ஏடிஎம்எம்-பிளஸ் கூட்டப்பட்டது. 2017 முதல் ஆசியான் மற்றும் கூடுதல் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஏடிஎம்எம்-பிளஸ் அமைச்சர்கள் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர்.

கடல்சார் பாதுகாப்பு, ராணுவ மருத்துவம், சைபர் பாதுகாப்பு, அமைதி காக்கும் நடவடிக்கைகள், பயங்கரவாத எதிர்ப்பு, மனிதாபிமான சுரங்கச் செயல்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகிய ஏழு நிபுணத்துவப் பணிக் குழுக்கள் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான நடைமுறை ஒத்துழைப்பை ஏ.டி.எம்.எம்-பிளஸ் மேம்படுத்துகிறது. 10-வது ஏடிஎம்எம்-பிளஸ் மாநாட்டின்போது, 2024-2027-ஆம் ஆண்டுக்கான அடுத்த இணை அமர்வுகளும் அறிவிக்கப்படும். 2021-2024 வரையிலான தற்போதைய சுழற்சியில், இந்தோனேசியாவுடன் இணைந்து மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் நிபுணத்துவப் பணிக் குழுக்களுக்கு இந்தியா இணை தலைமை வகிக்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: