திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்த மேலும் 9 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நவ.9-ம் தேதி இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கில் பேன்சி ரக பட்டாசுகளை கட்டிக் கொண்டு வீலிங் செய்தவாறு வெடித்து சாகசம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த அஜய்(24) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதுதவிர திருச்சியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி வருண்குமார் உத்தரவிட்டார். அதன்படி, சமயபுரம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட சிறுமருதூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வீலிங்கில் ஈடுபட்ட தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(22), சிறுகனூர் கணபதி நகர் சக்திவேல்(20), லால்குடி தச்சங்குறிச்சி விஜய்(18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, லால்குடி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீலிங்கில் ஈடுபட்ட லால்குடி பனமங்கலம் அருள்முருகன்(24), கம்பரசம்பேட்டை கிரித்தீஸ்(20), கீழசிந்தாமணி வசந்தகுமார்(20), லால்குடி எசனைக்கோரை தேசிங்க பெருமாள்(18), முகமது ரியாஸ்தீன்(22) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஜீயபுரம் காவல் சரகத்துக்கு உட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தலம் அருகே மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்த சிறுகனூர் இந்திரா காலனி அஜய்(20) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி வருண்குமார் கூறியது: திருச்சி புறநகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்ததாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வீலிங் செய்பவர்கள் குறித்த தகவல்களை 9487464651 என்ற செல்போன் எண்ணுக்கு தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *