ராய்ப்பூர்: மிகப் பெரிய பொய்யரை தேடினால் பிரதமர் நரேந்திர மோடியின் முகம்தான் தெரியும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பெகல் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து, “காங்கிரஸ் கட்சியிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். மகாதேவ் சூதாட்ட செயலி ஊழலின் மொத்த மதிப்பு ரூ.508 கோடி. இது குறித்து விசாரணை நடத்தி வரும் அமைப்புகள் மிகப் பெரிய அளவில் பணத்தை பறிமுதல் செய்திருக்கிறார்கள். முதல்வர் பூபேஷ் பெகலின் நெருக்கமான ஒருவர் தற்போது சிறையில் இருக்கிறார். இந்த ஊழலில் முதல்வர் பூபேஷ் பெகல் பெற்ற பணம் குறித்து காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்த வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், “சத்தீஸ்கர் வந்த பிரதமர் மோடி என்மீது தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருக்கிறார். நான் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவன். ஆனால், நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட சட்டத் திருத்தத்தின் மூலம் ஓபிசி வகுப்பில் சேர்ந்தார். நீங்கள் (பிரதமர் மோடி) மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நீங்கள் ஏன் நடத்தவில்லை? எதற்காக அஞ்சுகிறீர்கள்? மிகப் பெரிய பொய்யர் குறித்து நீங்கள் தேடினால், பிரதமர் மோடியின் முகம்தான் வரும். சத்தீஸ்கரில் இருந்துதான் அரிசி வாங்குவதாக அவர் கூறுகிறார். அவர் பொய் கூறுகிறார் என்பது மக்களுக்குத் தெரியும். இது வெறும் மக்களை ஏமாற்றும் முயற்சி” என்று தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *