மாண்டிநீக்ரோ நாட்டில் உள்ள பிரேஸ்னா என்ற கிராமத்தில் மிகப் பெரிய சோம்பேறி யார் என்பதற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதென்ன பிரமாதம், சோம்பறித்தனமாக இருப்பது எளிமையான விஷயம் தானே என்று நீங்கள் நினைக்கலாம்…
இந்தப் போட்டியில் 21 பேர் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 பேர் மட்டுமே போட்டியில் நீடித்து நிற்கின்றனர். போட்டியில் வெற்றி பெறும் மிகப் பெரிய சோம்பேறிக்கு பரிசுத் தொகையாக 1,070 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.88,000) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, தொடர்ந்து 117 மணி நேரம் படுத்தே கிடந்து ஒருவர் முதல் பரிசை தட்டிச் சென்றார். இந்த முறை போட்டி 20 நாட்களை கடந்துள்ளது. ஆனால், போட்டியாளர்கள் தங்கள் உச்சகட்ட சோம்பேறித்தனத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், தொடர்ந்து போட்டி நீடிக்கிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் உடல் நலன் குறித்து அக்கறை எடுத்துக் கொள்ளப்படுகிறதாம். அவர்களின் உடல்நிலை குறித்து அவ்வபோது பரிசோதிக்கப்படுகிறதாம். ஆனால், இவர்களுக்கான ஒரே நிபந்தனை படுத்தே கிடப்பதுதான். எழுந்து நின்றாலோ, அமர்ந்தாலோ உடனடியாக போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
கழிவறைக்கு செல்ல அனுமதி உண்டா?
8 மணி நேரத்திற்கு ஒருமுறை கழிவறைக்குச் செல்ல அனுமதி உண்டு. அதுவும் கூட 10 நிமிடங்களுக்கு மட்டும் தான். படுத்தே கிடக்கும்போது புத்தகம் வாசிக்கலாம் மற்றும் செல்ஃபோன் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த 2021ஆம் ஆண்டில் மிகப் பெரிய சோம்பேறி என்ற பட்டத்தை வென்ற துப்ரகா அக்சிக் என்ற பெண் இதுகுறித்துப் பேசுகையில், “இந்த முறையும் போட்டியில் கலந்து கொள்ளுமாறு என்னுடைய குடும்பத்தார்கள் வலியுறுத்தினர். நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் நம்முடைய அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்வதால் இது எளிமையான ஒன்றாகத்தான் இருக்கும்.

மிக பெரிய சோம்பேறி யார் போட்டி
ஆனால், இந்த முறையும் நான் வெற்றி பெற முடியும் என்று என் குடும்பத்தினர் எப்படி நம்பினார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் இப்போதே 20 நாட்கள் கடந்து விட்டன. நானோ அல்லது இங்கிருக்கும் மக்களோ, இவ்வளவு நாட்களுக்குப் போட்டி நீடிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை’’ என்று தெரிவித்தார்.
சோம்பேறி போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டுள்ள ஃபிலிப் நேஸ்விக் என்ற இளைஞர் தன்னால் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இயற்கையாகவே உண்டு. அதனால் தான் நான் வந்திருக்கிறேன். இங்கே நிறைய ஊக்கப்படுத்துகின்றனர். இங்கிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று கூறினார். சோம்பேறிகளை வைத்து வேடிக்கை காண்பிக்கும் விதமாக நடத்தப்படுகின்ற இந்தப் போட்டி, தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.