`கலக்கப்போவது யாரு’ மூலமாக மக்களிடையே அறிமுகமானவர் பாலா. இவர் `குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி இவருக்கென ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது என்றே சொல்லலாம். அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் கொண்டிருக்கிறார்.
அவருடைய பிறந்த நாள் அன்று சமீபத்தில் அறந்தாங்கியில் முதியவர்களுக்காக இலவச ஆம்புலன்ஸை வாங்கிக் கொடுத்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதைத் தொடந்து நேற்று (17.08.2023) ஈரோடு மாவட்டம் குன்றி மலைக்கிராமத்துக்கு பத்து லட்சம் மதிப்பில் வென்டிலேட்டர் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் பேசினேன்.

“நான் ஏற்கெனவே பெரியவங்களுக்காக அறந்தாங்கியில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தேன். அதைப் பார்த்துட்டு ஒருத்தவங்க என்கிட்ட இங்கேயும் 12 கிராமத்துல கிட்டத்தட்ட 8000 மக்கள் இருக்காங்க. அங்க கரடி, சிறுத்தை, பாம்பு எல்லாம் கடிச்சா மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போக நேரம் ஆகுது. கடம்பூரில் இருந்துதான் ஆம்புலன்ஸ் வர வைக்கணும்னு சொன்னாங்க. அவங்க சொன்னது ஈரோடு மாவட்டம் கடம்பூர் பக்கத்துல இருக்கிற குன்றி மலைக்கிராமம்னு தெரிஞ்சது. ஆம்புலன்ஸ் வர நேரம் ஆகுறதனால பல உயிர்கள் போகுதுன்னு சொல்லி உதவி கேட்டிருந்தாங்க.
அதற்காக அவங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுக்கணும்னு முடிவு பண்ணினேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் வரைக்கும் இதற்கான பணத்தைத் தயார் பண்ண ஆரம்பிச்சேன். உனக்குன்னு ஏதாவது வச்சிக்கோன்னு எல்லாரும் சொல்லுவாங்க. ஒரு மனுஷனுடைய சராசரி வாழ்க்கையே இப்ப 50 வயசுதான்னு ஆகிடுச்சு. ஒரு குழந்தைக்கு முதலில் உதவி பண்ண ஆரம்பிச்சேன். அவங்க சந்தோஷமா இருக்கிறதைப் பார்க்கும்போது அது ரொம்ப மன நிறைவா இருக்கு.

நான் எப்பவும் ஜாலியா தான் பேசிட்டு இருப்பேன். அந்த ஊரைச் சேர்ந்த ஒரு அண்ணன் என்கிட்ட பேசும்போது இது ரொம்ப பெரிய உதவி. இது எங்க வாழ்க்கைக்கான விஷயம்னு சொல்லி ரொம்ப எமோஷனலா என்கிட்ட பேசினார். அவங்க சொன்ன வார்த்தைகளுக்கெல்லாம் நான் தகுதியான ஆளான்னு எனக்குத் தெரியல!” என்றவர் சில நொடி மெளனத்திற்குப் பின் தொடர்ந்தார்.
“நன்றியுணர்வு ரொம்ப முக்கியம்னு நான் எப்பவும் நினைப்பேன். என்னை முதன்முதலா அறிமுகப்படுத்தியது அமுதவாணன் அண்ணன்தான். அவர் ஆரம்பத்திலேயே மத்தவங்களுக்கு உதவி பண்ணனும்னு சொல்லுவார். நான் இந்த மாதிரியான விஷயங்களை முன்னெடுத்ததுக்கு அவரும் ஒரு முக்கியக் காரணம். நான் பெருசா எதுவும் சம்பாதிக்கல. ஆனாலும், எங்க வீட்ல என் அம்மாவும் சரி, என் அப்பாவும் சரி பரவாயில்லப்பா… காசை தேவையில்லாத வழிகளில் அழிக்காம ஏதோ ஒரு விஷயம் உருப்படியா பண்றியேன்னு தான் சொல்லுவாங்க. எங்க அம்மாகிட்டலாம் பலர், `இவன் காலி.. காசெல்லாம் வாங்கி சேமிக்காம செலவு பண்ணிட்டு இருக்கு’னு சொல்றப்ப யார் என்ன சொன்னாலும் என் பையன் திடீர்னு ஃபீல்டுஅவுட் ஆனாலும் பரவாயில்ல… மத்தவங்களுக்காக ஒரு விஷயம் பண்றான் அது போதும்னு சொன்னாங்க.

2019-ல் ஒரு குழந்தை படிக்கிறதுக்காக ஃபீஸ் கட்டினேன். அது என் மனசுக்கு ரொம்ப நிறைவைக் கொடுத்துச்சு. இந்த வருஷம் 29 குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டியிருக்கேன். படிப்புங்கிறது குழந்தைகளுக்கு ரொம்பவே முக்கியம்னு நினைக்கிறேன். படிக்கணும்னு ஆசைப்படுற குழந்தைங்களைப் படிக்க வைக்கும்போது அவங்க முகத்துல வர்ற சந்தோஷத்தைப் பார்க்குறப்ப அதைவிட சிறந்த போதை வேற எதுவுமே இல்லைங்க!” என்றார்.