கும்பகோணம்/திருச்செந்தூர்/பழநி/மதுரை: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் நேற்று திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில், 60 படிக்கட்டுகள், தமிழ் ஆண்டுகளின் 60 பெயர்களைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தமிழ்ப் புத்தாண்டையொட்டி, 60 படிகளுக்கும் பூஜைகள், சோபகிருது ஆண்டுக்குரிய படிக்கு சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றன.

தொடர்ந்து, பன்னிரு திருமுறைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, நிகழாண்டில் நல்ல மழை பெய்ய வேண்டியும், வறட்சி நீங்கி தானிய விளைச்சல் பெருகவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதிகாலை மூலவர் சுவாமிநாத சுவாமி நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவசம், வைரவேல் அலங்காரம் நடைபெற்றன.

இதேபோன்று, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. விசு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கனி காணும் பொருட்டு உள்பிரகாரத்தில் காய்கனிகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.

கடற்கரைக்கு அஸ்திரதேவரை எழுந்தருளச் செய்து,கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதேபோன்று, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதேபோன்று, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நேற்று அதிகாலை முதலே உள்ளூர், வெளியூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *