தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். இந்த சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் தமிழ் வருடப் பிறப்பு என்று கொண்டாடப்படுகிறது. விஷு என்று கேரளாவிலும் இந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், கனி காணுதல் எனும் வைபவத்துடன் கொண்டாடுவது வழக்கம்.

ஒரு தாம்பாளத்தில், மாம்பழம், வாழைப்பழம், பலாச்சுளை, ஆப்பிள், ஆரஞ்சு முதலான பழங்களை வரிசையாக வைப்பார்கள். அதில் சில்லறைக் காசுகள், சிறிய முகக்கண்ணாடி, பூ, தங்க நகைகள் என வைப்பார்கள். முதல்நாளே, வீட்டுப் பூஜையறையை சுத்தம் செய்துவைத்து விடுவார்கள். சுவாமி படங்களை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் வைத்து விடுவார்கள். பழங்களும் காசுகளும் கண்ணாடியும் கொண்ட தாம்பாளத்தை பூஜையறையில் கோலமிட்ட இடத்தில் வைத்துவிடுவார்கள்.

புத்தாண்டுப் பிறப்பான ஏப்ரல் 14-ம் தேதி அன்று, காலையில் எழுந்ததும் தாம்பாளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழங்களிலும், பணத்திலும், கண்ணாடியிலும் கண்விழிப்பது வழக்கம். சித்திரை விஷூ என்றும், தமிழ்ப் புத்தாண்டு என்றும் கொண்டாடப்படும் இந்த உன்னதமான நன்னாளில், இப்படி கண்விழித்துப் பார்ப்பதால், கனிகளைப் போல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நம் முகத்தை நாமே கண்ணாடியில் பார்ப்பதால், நம்மைச் சுற்றியுள்ள திருஷ்டி அனைத்தும் விலகிவிடும்.

தங்கம் மற்றும் காசுகளைப் பார்ப்பதால், சகல ஐஸ்வர்யங்களும் நம் இல்லத்தில் தங்கும் என்பது ஐதீகம். முன்னர், இந்த வழக்கம், கேரளாவில் மட்டுமே இருந்தது. பின்னர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் என கேரளத்தையொட்டியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து, தமிழக மக்களிடம் இது பரவியது என்றும் கூறப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு நாளில் கனி காணுதல் எனும் சம்பிரதாயம் வரத்தொடங்கியதாகச் சொல்லுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதியான வெள்ளிக்கிழமையன்று, வீட்டில் விளக்கேற்றுங்கள். தெய்வங்களை நினைத்து மனதார வேண்டிக் கொண்டு விளக்கேற்றுங்கள். உங்கள் குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும். வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும். வீட்டின் தரித்திரம் விலகும். சகல ஐஸ்வர்யங்களும் குடிகொள்ளும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: