அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்து, சட்டமன்றத்தில் சட்டமாக்கியவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் என்றும் சமூகநீதி பரப்பப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஒரு சமூக நீதி மாநாட்டினை இந்திய அளவில் நடத்தியவர் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆகவே, அம்பேத்கருக்கு விழா எடுக்கின்றோம் என்று சொன்னால் அது கொள்கை ரீதியான விழா. இது ஏதோ அரசியலுக்காக அல்ல. சமூதாய சீர்திருத்தத்திற்காக, சமூக நோக்கத்தோடு பாடுபட்ட அம்பேத்கர், ஆண், பெண் வேறுபாடு, சாதிய வேறுபாடுகள் மறந்து ஒன்றாக வாழ வேண்டும் எனவும் பாடுபட்டார். அதனால் தான் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தமிழக அளவிலே இது இளைஞர்களுக்கு சென்றடையும், வரலாற்றை மறந்துவிடக்கூடாது. இன்று மத்திய அரசு என்னென்ன செய்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.