
கரூரில் சிமெண்ட் கலவையை தம்பதி மீது ஊற்றிய மாநகராட்சி ஒப்பந்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு ஜெ ஜெ நகரைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். அவரது மனைவி கோமதி. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பதினாறாவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கரூர் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதனிடையே பாலச்சந்தர் வசிக்கும் பகுதியில் சாலை கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் போது பாலச்சந்தர் வீட்டின் சுவர் சேதம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் சேதமடைந்த பகுதிகளை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் சீரமைக்க முயன்ற போது தனக்கு புதியதாக வீட்டின் சுவரை அமைத்து தரவேண்டும் என ஒப்பந்த ஊழியரிடம் பாலச்சந்தர் கூறியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பாலச்சந்தர் மற்றும் கோமதி இருவரும் கால்வாய்க்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சிமெண்ட் கலவையை அவர்கள் மீது ஒப்பந்த ஊழியர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதினர் ஓடிவந்து சமரசம் செய்தனர். பின்னர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் வேறு பகுதிக்குச் சென்று பணியை தொடங்கினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.