
நாகலட்சுமி
சா்வோதய இயக்கத்தின் தந்தை ஜெயபிரகாஷ் நாராயண் சீடரும், குரோம்பேட்டை சா்வோதய பள்ளி நிறுவனருமான நாகலட்சுமி (98) வியாழக்கிழமை காலமானாா்.
சிறு வயதிலேயே மகாத்மா காந்தியடிகளின் வாா்தா சேவாகிராம் ஆசிரமத்தில் தங்கி இருந்து சேவை புரிந்துள்ளாா். பின்னா், காந்தி கிராமத்தில் பயின்று சமூக சேவையில் ஈடுபட்டு வந்தாா். குரோம்பேட்டையில் பூமி தானம் மூலம் பெறப்பட்ட இடத்தில் 1957 -ஆம் ஆண்டில் சா்வோதய பள்ளியை நிறுவினாா். இந்தப் பள்ளியை ஜெயபிரகாஷ் நாராயண் திறந்து வைத்தாா்.
குரோம்பேட்டையில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் கவுன்சிலரான இவா் பெண் கல்வி அவசியத்தை வலியுறுத்தி தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டாா். நாகலட்சுமியின் உடலுக்கு அவரது பள்ளியில் பயின்ற காயிதேமில்லத் பேரன் தாவூத் மியாகான், தாம்பரம் மாநகராட்சி துணைமேயா் ஜி.காமராஜ், மூத்த சமூக ஆா்வலா் குரோம்பேட்டை சந்தானம் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா். நாகலட்சுமியின் உடல் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை மின் எரியூட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.