Loading

மதுரை: மேலூர் அருகே போலீஸார் எனக் கூறி தொழிலதிபரின் காரை வழிமறித்து ரூ.50 லட்சத்தைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் தாவூத் (55), டெக்ஸ்டைல் தொழிலதிபர். இவர் தனது மனைவி யூசுப் சுலைகாவுடன் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து காரில் கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு புறப்பட்டார். காரை சித்திக் என்பவர் ஓட்டினார்.

மேலூர் அருகே கருங்காலக்குடி திருச்சுனை பகுதி நான்கு வழிச்சாலையில் நள்ளிரவில் சென்றபோது போலீஸ் சீருடை அணிந்த நிலையில் நின்றிருந்த இருவர் ஷேக் தாவூத்தின் காரை வழிமறித்து சாலையோரமாக நிறுத்தும்படி கூறினர்.

சீருடையில் இருப்பதை பார்த்த அவர்கள் காரை நிறுத்தியதாக தெரிகிறது. உடனே இருவரும் காரை சோதனையிட்டனர். காரில் ஷேக் தாவூத் மனைவி வைத்திருந்த பையில் ரூ.50 லட்சம் பணம் இருப்பதை தெரிந்துகொண்ட அவர்கள் பணத்தை எடுத்துக்கொண்டனர். இதன் பின் பணத்துக்கான உரிய ஆவணங்களைக் காண்பித்து கொட்டாம்பட்டி காவல் நிலையத்துக்கு வந்து ரூ.50 லட்சத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றனர்.

இதையடுத்து, ஷேக் தாவூத் தனது மனைவியுடன் காவல் நிலையத்துக்குச் சென்றபோது, அந்த இடத்தில் போலீஸார் யாரும் சோதனையில் ஈடுபடவில்லை என அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த ஷேக் தாவூத், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஷேக் தாவூத்திடம் வழிப்பறி செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை சேகரித்து தனிப்படையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸார் கூறுகையில் ‘ஷேக் தாவூத் பண்ருட்டிக்கு எதற்காக புறப்பட்டார். அவரிடம் இருந்து பறிபோனதாக கூறும் ரூ.50 லட்சம் பற்றி விசாரிக்கிறோம். அப்பணம் `ஹவாலா’ பணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது’ என்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *