நாள், வாரம், மாதம் ஆகியவற்றைக் குறிக்கும் பஞ்சாங்கம் அல்லதுநாள்காட்டிகள், பொதுவாக, சூரியனின் இயக்கத்தை அடிப்படையாககொண்டே கணக்கிடப்பட்டு, வடிவமைக்கப்படுகின்றன. எனவே சூரியனை அனுசரித்துச் செல்லும் இந்த முறை, சௌரமான முறை எனப்படுகிறது. இந்த முறைப்படி, 12 ராசிகள் வழியாகப் பயணம் செய்யும் சூரியன், இவற்றில் ஒவ்வொரு ராசிக்குள்ளும் தங்கி இருக்கும் காலமே, ஒரு தமிழ் மாதமாகக் கணக்கிடப்படுகிறது.

மேஷ ராசி என்பது இந்த 12 ராசிகளில் முதல் ராசியாகும். ஆகவே, சூரியன் இந்த முதல் ராசியான மேஷத்தில் இருக்கும் காலம், முதல் மாதமாகிய சித்திரை எனவும், மேஷ ராசியில் பிரவேசம் செய்யும் நாள் சித்திரை வருடப் பிறப்பு எனவும், தமிழ்ப் புத்தாண்டு எனவும் கொண்டாடப்படுகிறது.

இதேமுறைப்படி, விஷூ எனப்படும் மலையாளப் புத்தாண்டு, பைசாகி என்ற பஞ்சாபி புத்தாண்டு, பிஹூ எனப்படும் அஸ்ஸாமியப் புத்தாண்டு போன்றவையும் கொண்டாடப்படுகின்றன.

பண்டைய காலக்கணக்கின் படி, சித்திரை, வசந்த காலமாகக் கருதப்படுகிறது. தவிர, சதுர்வர்க சிந்தாமணி என்ற பண்டைய நூல் ஒன்று, இதற்கு புராண முக்கியத்துவத்தையும் அளிக்கிறது. சைத்ர மாதம் எனப்படும் இந்த சித்திரை மாதத்தின் வளர்பிறை, பிரதமை நாளில் தான், படைப்புக் கடவுளான பிரம்மா, அனைத்து உலகங்களையும் படைத்தார் என்று இந்த நூல் கூறுகிறது.

இது போன்ற பெருமை படைத்த இந்த மாதத் துவக்கம், புதிய ஆண்டின் தொடக்க நாளாகவே போற்றப்படுகிறது. விஷ்ணு பகவானின் பூர்ண அவதாரம் எனக் கருதப்படும் ராமபிரான் அவதரித்தது, சைத்ர மாதத்தில் தான் என்கிறது வால்மீகி ராமாயணம். பஞ்சாங்க வேறுபாடுகளின் காரணமாக காலகட்டம் சற்றே மாறுபட்டிருந்தாலும், இந்த மாதத்தையே நாம் சித்திரை என்கிறோம்.

ராம அவதாரம் மட்டுமின்றி, மற்றொரு அவதாரமான மத்ஸ்யம் எனப்படும் மீனாக விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்ததும் இந்த சைத்ர மாத வளர்பிறை பஞ்சமியில் தான் என்று புராணம் கூறுகிறது. விஷ்ணுவின் முதல் அவதாரமாகக் கருதப்படும் இந்த மத்ஸ்ய அவதாரத்தின் மூலம், அவர், உலகத்தைப் பெரும் பிரளயத்திலிருந்து காப்பாற்றி, உயிர்களை இங்கு மீண்டும் தோன்றச் செய்தார் எனப் பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.

சித்திரையும், விழாக்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல எனலாம். சித்திரை வருடப் பிறப்பை மக்கள் தங்கள் இல்லங்களில் கொண்டாடுவது போலவே, புகழ் பெற்ற கோயில்களில்குடிகொண்டிருக்கும் தெய்வங்கள் பலவும், பிரம்மாண்டமான திருவிழாக்களைக் கொண்டாட, இந்தமாதத்தையே தேர்ந்தெடுத்துள்ளனர் என்று சொல்லலாம். வைணவத் திருக்கோயில்கள் பலவற்றிலும் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பெரும் உற்சவங்கள் சித்திரை மாதத்திலேயே நடைபெறுகின்றன.

இவற்றில் புகழ் பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் திருவிழாவும் அடங்கும். இந்த மாதத்தில் வரும் வளர்பிறைப் பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி என்றபெயரில், மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்தப் புனித நாளில் பல வழிபாடுகளும், சமய, ஆன்மீக நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

இத்தனை சிறப்புகள் கொண்ட சித்திரை வருடப் பிறப்பை, பாரம்பரிய முறைப்படியும், பெரும் உற்சாகத்துடனும் மக்கள் கொண்டாடுகிறார்கள். சிலர் புத்தாடை அணிகிறார்கள். இறைவனையும், பெரியவர்களையும் வணங்கி ஆசி பெறுகிறார்கள். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறார்கள்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *