சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காதது, ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்தும் சனாதன ஆதரவு பேச்சுகள் குறித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி எந்தவித வருத்தமும், விளக்கமும் அளிக்காததைக் கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஏப்.12-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை, சைதாப்பேட்டையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசியதாவது:

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், ஏன் இத்தனை நாள் ஒப்புதல் அளிக்கவில்லை. இது மட்டும் போதாது; பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட அனைத்து மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விஷயம் குறித்து மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஆளுநருக்கு என்ன துணிச்சல் இருந்தால் பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை தவிர்ப்பார். நான் முதல்வராக வர வேண்டும் எனக் கூறி, ஸ்டெர்லைட் மேலாண் இயக்குநர் என்னிடம் தனியாக பேச வேண்டும் என்றார். ஆனால் சந்திக்க மறுத்தேன். அட்டார்னி ஜெனரல் கூட ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பேசினார். அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினேன். இவ்வாறாக இருக்கும் என் போன்ற மக்களை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பணம் பெற்று போராடினோம் எனக் கூறிய ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மாணவர்களை கேள்வி கேட்கச் செய்து ஆளுநர் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பேசியுள்ளார். அவர் ஆன்லைன் சூதாட்ட பிரதிநிதிகளுடன் பேசியபோது என்ன நடந்தது என நமக்கு தெரியாது. அரசின் கொள்கையை ஆளுநர் உரை எனக் கூறுவதை மாற்ற வேண்டும் என்பது என் கருத்து. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஏற்றுக் கொண்ட அவர், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். அந்த பொறுப்புக்கு அதிகபட்சமாக களங்கம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் மீதான புகார் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழக ஆளுநராக நீடிக்க ரவி தகுதியற்றவர். ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தவர் ஏன் நிரந்தர தடைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருவதை அறிந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இப்படி தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநருக்கு ஆதரவாகவே அதிமுக செயல்படுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் நமது நிலைப்பாடு. ஆனால் இருக்கும் வரை அவருடைய கடமையை செய்ய வேண்டும். அதை நினைவூட்ட அரசு, தலைவர்கள் என ஏராளமானோர் தேவைப்படுகின்றனர். பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் ஆளுநர் துணைவேந்தர் பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரையே நியமிக்கிறார். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: