Tamilnadu
oi-Vignesh Selvaraj
தென்காசி : ஏப்ரல் 14ஆம் தமிழ் புத்தாண்டு, தமிழ்நாட்டு அரசியலையே புரட்டிப் போடப் போகும் நாள். தமிழ்நாடே கிடுகிடுக்கப் போகிறது. 27 திமுக புள்ளிகளின் சொத்துப் பட்டியலை முழுமையாக வெளியிடப்போகிறோம் என ஆவேசமாகப் பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
நேற்று டெல்லிக்குச் சென்று, பாஜகவின் டாப் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பிய அண்ணாமலை இன்று தென்காசியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, திமுகவின் 27 புள்ளிகளின் ஊழல், சொத்து பட்டியலை வெளியிடப்போகிறோம், அன்றைக்கு இருக்கிறது கச்சேரி என ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
கூண்டை விட்டு கிளி வெளியே வரப்போகுதாமே.. அண்ணாமலை சூசகமாக சொன்ன ‘கதை’.. அப்போ அதிமுகவுக்கு சிக்னலா?

பாஜக அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக திமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். பல்வேறு துறைகளிலும் முறைகேடு நடந்திருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர். அண்ணாமலை போகிறபோக்கில் பொய் புகார் சொல்லாமல் ஆதாரத்துடன் குற்றம்சுமத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, வாட்ச் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு, திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மதுரை எய்ம்ஸ்
இந்நிலையில் இன்று தென்காசியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் வரும் என்று சொல்லி இத்தனை ஆண்டுகளாகியும் எய்ம்ஸ் இன்னும் வரவில்லை என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் பேசுகிறார்கள். மத்திய அமைச்சர் அதற்கு பதில் சொல்கிறார். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடங்கி, 150 மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எய்ம்ஸில் இங்கே உட்கட்டமைப்பு இல்லை. 2026 மார்ச் மாதம் முழுமையாக எய்ம்ஸ் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்தியாவிலேயே எங்கும் எல்லாத வகையில் ஜப்பான் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து அந்தப் பணத்தில் மதுரையில் எய்ம்ஸ் கட்டப்படுகிறது. இந்தியாவில் வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தாலும், அவையெல்லாம் சிறிய அளவிலானவை. ஆனால், தமிழ்நாட்டில், டெல்லிக்கு நிகரான அளவில் கட்டப்பட உள்ளது.

அந்த பணத்தை கொடுங்க
இந்த வருடம் சாராயம் விற்றதில் இருந்து 46 ஆயிரம் கோடி பணம் வந்துள்ளது. அடுத்த வருடம் ரூ. 55 ஆயிரம் கோடி வரும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாராயம் விற்று வந்த ரூ. 46 ஆயிரம் கோடியில் ஒரு 2000 கோடியை மத்திய அரசுக்கு கடனாக கொடுத்தால் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்துவிடலாம். ஜப்பானிடம் கைகட்டி நின்று கடன் வாங்கி கட்டுவதை விட எளிதாக கட்டிவிடலாம். திமுக அரசை பொறுத்தவரை எய்ம்ஸ் மருத்துவமனை வரக்கூடாது என்பதற்காக ஒரு செங்கலையும் திருடிக்கொண்டு செங்கல் திருடன் ஓடிக்கொண்டிருக்கிறார். உண்மையாகவே, எய்ம்ஸ் சீக்கிரமாக வரவேண்டும் என்றால் சாராய பணத்தில் இருந்து 2000 கோடியை கொடுத்தீர்கள் என்றால் கட்டி விடலாம்.

27 திமுக புள்ளிகள்
தமிழ்நாடு பாஜக சார்பில், வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் சொத்து பட்டியலை வெளியிடப்போகிறோம். நாம் வெளியிடப்போகும் சொத்து பட்டியல் மொத்தமாக 27 திமுக புள்ளிகளுடையது. அவர்களின் சொத்து மதிப்பு மட்டுமே 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய். தமிழ்நாட்டின் ஜிடிபி என்பது 25 லட்சம் கோடி. தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபியில் 10% இந்த 27 பேரின் கையில் இருக்கிறது. இந்த 27 புள்ளிகளில் சிலர் அமைச்சர்கள், சிலர் முன்னாள் அமைச்சர்கள், சிலர் எம்.எல்.ஏக்கள். திமுகவில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று சொத்துகளை சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

கச்சேரி இருக்கு
துபாயில் நிறுவனம் நடத்துகிறார்கள், துறைமுகங்களை நடத்துகிறார்கள், லண்டனில் 3 நிறுவனங்களை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். எல்லா விவரங்களும் ஏப்ரல் 14ஆம் தேதி வரும். இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு, ஊழலுக்கு எதிரான மாபெரும் திருவிழாவாக நடைபெறப் போகிறது. அன்றைக்கு இருக்கிறது கச்சேரி. அன்றைக்கு குறிப்பாக ஒத்த செங்கல் திருடனுக்கு கச்சேரி இருக்கிறது. அதன் பிறகு தமிழ்நாட்டில் அரசியல் புரட்சி நடக்கும். டீக்கடைகளில், பூக்கடைகளி, ஆடு மாடு மேய்ப்பவர்கள், பேருந்துகளில் கண்டெக்டர்கள் பேசுவார்கள். அதற்கு அப்புறம் இருக்கிறது பாஜகவின் அரசியல்” என ஆவேசமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை.

டெல்லிக்கு சென்று வந்த பிறகு ஆவேசம்
சமீபத்தில் அதிமுக கூட்டணி தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று டெல்லிக்குச் சென்றார் அண்ணாமலை. டெல்லியில் அமித்ஷா, ஜேபி நட்டா, பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுள்ளார் அண்ணாமலை. இன்று தமிழ்நாட்டுக்குத் திரும்பிய நிலையில், அண்ணாமலை பேச்சில் கூடுதல் வேகம் தென்படுகிறது. திமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து தென்காசியில் அண்ணாமலை பேசியிருப்பது பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. அண்ணாமலைக்கு இவ்வளவு உத்வேகம் கொடுக்கும் வகையில் டெல்லியில் அப்படி என்ன நடந்ததோ.. அது அண்ணாமலைக்கே வெளிச்சம்.
English summary
BJP state president Annamalai has said furiously that they are going to publish the complete list of assets of 27 DMK top functionaries.