திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட 1,000 இலவச வேட்டி, சேலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை அதிவேகமாக ஆட்டோ ஒன்று சென்றுள்ளது. இதையறிந்த ரோந்து பிரிவு காவலர்கள், ஆட்டோவை விரட்டி சென்று அவலூர்பேட்டை ரயில்வே ‘கேட்’ அருகே மடக்கினர். பின்னர், ஆட்டோவை சோதனையிட்டபோது, 10 மூட்டைகளில் நியாய விலை கடை மூலமாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு இலவசமாக வழங்கப்படும் 1,000 வேட்டி மற்றும் சேலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, ஆட்டோவில் இருந்த 2 பேரிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் இருவரும் திருவண்ணாமலை அருகே உள்ள வட ஆண்டாப்பட்டு அடுத்த அரசன்குளம் கிராமத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் சண்முகசுந்தரம் மகன் பரசுராமன் (30), வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் வசிக்கும் குமார் மகன் துவாரகேசன்(28) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் இருவரும், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து வட்டாட்சியர் சுரேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்துக்கு சென்று பறிமுதல் செய்து வைத்திருந்த இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ஆட்டோவை பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறும்போது, “10 மூட்டைகளில் உள்ள வரிசை எண்களை கொண்டு விசாரணை நடத்தி, எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என உறுதி செய்யப்படும். நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவையாக கூட இருக்கலாம்” என்றார். காவல்நிலையத்துக்கு செல்வதற்கு முன்பாக, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கின் கள்ள சாவியை பயன்படுத்தி, இலவச வேட்டி, சேலைகள் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி இருந்தார்.

இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் கூறும்போது, “திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் இருந்து ஆட்டோவில் இலவச வேட்டி, சேலை கடத்தப்பட்டுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் வருவாய்த் துறையில் உள்ள சிலர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இலவச வேட்டி, சேலையை குறிப்பிட்ட பகுதிக்கு கடத்தி சென்று தரகர்கள் மூலம் வெளி மாநிலங்களுக்கு ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு, கேரள மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள், ஆந்திர மாநிலத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், பெங்களூருவில் கட்டிட தொழிலாளர்களுக்கு அவர்களது முதலாளிகள் மூலமாக வழங்கப்படுகிறது.

இந்த கடத்தல் பின்னணியில் மிகப்பெரிய சிலந்தி வலை உள்ளன. இந்த கடத்தலில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் தரகர் ஒருவர் சிக்கியுள்ளார். இதில் துவாரகேசனின் உறவினர் ஒருவர் கிடங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கு உட்பட அனைத்து கிடங்குகளிலும் இருப்பு விவரங்களை வெளிப்படை தன்மையுடன் ஆட்சியர் ஆய்வுக்கு உட்படுத்தினால், கருப்பு ஆடுகளின் முறைகேடு வெளிச்சத்துக்கு வரும்” என்றனர்.

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நியாய விலை கடைகளில் பெரும்பாலானவர்களுக்கு இலவச வேட்டி, சேலை இல்லை என கூறி திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *