Loading

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் முதல் இடைத்தேர்தல், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என அ.தி.மு.க. பிளவுகளுக்கு இடையில் நடக்கும் முதல் தேர்தல் என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்றைய பேசுபொருளாகி இருக்கிறது. 

இவை தவிர்த்து, கோஷ்டிப் பூசலாலும் முறையான திட்டமிடல் இல்லாமையாலும் நாடு முழுவதும் சரிந்து வரும் வாக்குவங்கிக்கு இடையில் தள்ளாடும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டி உள்ளது. உட்கட்சித் தலைவர்கள் அதிருப்தி, வீடியோ வெளியாகி சர்ச்சை, ரஃபேல் கடிகார விவகாரம், விமான அவசர காலக் கதவு சர்ச்சை என தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வரும் அண்ணாமலையும் தன்னுடைய நிர்வாகத் திறனைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் இடைத்தேர்தல் விவகாரம் இன்னும் சூடுபிடித்துள்ளது. 

வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தி.மு.க. அறிவித்துவிட்ட நிலையில், வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன. அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோர் தொகுதிக்குள் வீடு, வீடாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

news reels

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவரும் அ.தி.மு.க. போட்டியிடும் என்று தனித்தனியாக அறிவித்துள்ளனர். இருவருமே த.மா.கா., பா.ஜ.க. ஆகிய கட்சிகளைத் தனித்தனியே சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதியைப் பற்றிக் காணலாம். 

ஈரோடு தொகுதி 

ஈரோடு கிழக்கு தொகுதி, ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டப்பேரவைத் தொகுதி ஆகும். 2008ம் ஆண்டு நடந்த தொகுதி மறு சீரமைப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதி ஈரோடு தாலுகா (பகுதி), பிராமண பெரிய அக்ரஹாரம் (பேரூராட்சி), ஈரோடு (நகராட்சி) மற்றும் வீரப்பன்சத்திரம் (பேரூராட்சி) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். 

ஈரோடு கிழக்கு தொகுதியானது ஈரோடு மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்வில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த கணேசமூர்த்தி திமுக சின்னத்தில் வெற்றிபெற்று, எம்.பி.யாக உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியைச் சுற்றிலும், ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், பவானிசாகர் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

நகரங்களைக் கொண்ட தொகுதி

ஈரோட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் இந்தத் தொகுதிக்குள் வருகின்றன. குறிப்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, ஈரோடு பேருந்து நிலையம், ஈரோடு ஆட்சியர் அலுவலகம், ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஜவுளி சந்தை, காய்கறி சந்தை, முக்கியக் கடைவீதிகள் ஆகியவை ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் உள்ளன. 

2.26 லட்சம் வாக்காளர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,10,713 ஆண் வாக்காளர்களும், 1,16140 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இவர்களுடன் 23 மாற்றுப் பாலின வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்களும் உள்ளனர். ஆக மொத்தம் 2,26, 898 வாக்காளர்கள் தொகுதியைச் சார்ந்தவர்களாக உள்ளனர். வாக்காளர்களுக்காக்க 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பிரதான வாக்காளர்கள் யார்?

இங்கு கொங்கு வேளாளர் எனப்படும் கவுண்டர் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். சுமார் 75 ஆயிரம் பேர் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதைத் தொடர்ந்து முதலியார், அருந்ததியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். 54 ஆயிரம் வாக்குகள் முதலியார் சமூகத்தில் இருந்தும் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் எஸ்சி சமூகத்தில் இருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் தவிர்த்து வடமாநிலத் தொழிலாளர்களும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கின்றனர். சுமார் 43 ஆயிரம் சிறுபான்மை மக்கள் தொகுதிக்குள் வாக்காளர்களாக உள்ளனர். குறிப்பாக 27,600 முஸ்லிம்களும் 16 ஆயிரம் கிறிஸ்தவர்களும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குச் சார்ந்தவர்கள் ஆவர். அதேபோல வட மாநிலத்தவர்களின் 8,300 ஓட்டுகள் தொகுதிக்குள் உள்ளன. 

தொழில் 

ஜவுளித்தொழிலே இங்கு பெரும்பான்மையாக உள்ளது. சாயத் தொழில் சார்ந்து நிறையப் பேர் இயங்கி வருகின்றனர். மருத்துவமனை, ஆட்சியர், கண்காணிப்பாளர் அலுவலகங்கள், கடைகள் சார்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களும் தொகுதிக்குள் உள்ளனர். 

கடந்த கால வெற்றி வரலாறு 

2008 தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 3 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 2011-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வென்றது. 2016 தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடியது. 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

இதில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் களம் காண்பார் என்றும், காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தம்பி சஞ்சய் சம்பத் போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *