ராய்பூர்: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, ராய்பூரில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன் குவித்தது. இளம் வீரர் கில் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.

அடுத்து 350 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 131 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறிய நிலையில், பிரேஸ்வெல் – சான்ட்னர் ஜோடி 7வது விக்கெட்டுக்கு அமர்க்களமாக விளையாடி இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டியது. குறிப்பாக, பிரேஸ்வெல் 78 பந்தில் ஒரு டஜன் பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 140 ரன் விளாசி ருத்ரதாண்டவம் ஆடினார். ஷர்துல் வீசிய கடைசி ஓவரில் அவர் ஆட்டமிழக்க, இந்தியா வெற்றியை வசப்படுத்தி 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஷாகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

இப்போட்டியில் வென்று 2-0 என முன்னிலையை அதிகரிப்பதுடன் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. முதல் போட்டியில் கில் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறியதால், இன்று கவனமாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே சமயம், ஐதராபாத்தில் நூலிழையில் வெற்றியை நழுவவிட்ட நியூசிலாந்து அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளவும் போராடும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்த இந்தியா, முன்னதாக 2020 பிப்ரவரியில் நியூசி. சென்று விளையாடியபோது 0-3 என ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. அந்த 2 ‘தொடர்’ தோல்விகளுக்கும் பதிலடி கொடுக்க இந்தியாவும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *