மல்யுத்த கூட்டமைப்பு மீது நடவடிக்கை:
பாலியல் புகார்கள், தகுதியற்ற பயிற்சியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் மீது மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுமத்தப்பட்டுள்ள புகார்கள் குறித்து தக்க விசாரணை நடத்தப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார். மேலும், இந்தப் புகார்களை விசாரிக்க மேரி கோம், டோலா பானர்ஜி, அலக்நந்தா அஷோக், யோகேஷ்வர் தத், சஹ்தேவ் யாதவ் உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
தந்தைக்கு சமர்ப்பணம்:
இந்திய பெண்கள் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடி வருகிறது. இதில், பஞ்சாபைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான அமன்ஜோத் கௌர் 41 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம், விளையாடிய முதல் போட்டியிலேயே சிறந்த வீராங்கனைக்கான விருது பெற்ற வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார் கௌர். இந்த விருதை தச்சராக வேலை செய்யும் தனது தந்தை புபிந்தர் சிங் மற்றும் தனது பயிற்சியாளர் நாகேஷ் குப்தா ஆகியோருக்கு அர்ப்பணித்தார்.
இந்திய அணிக்கு அபராதம்:
நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், போட்டியை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்காததால் ஸ்லோ ஓவர் ரேட்டின் காரணமாக இந்திய அணிக்கு 60% அபராதம் விதித்தது ஐசிசி. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தவற்றை ஒப்புக்கொண்டு அபராதத்தை ஏற்றுக்கொண்டார்.
பண்டை எதிர்நோக்கும் பாண்டிங்:
சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பண்ட் ஏப்ரலில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் அணியில் அவர் இருக்க வேண்டும் என விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.