ஈரோடு: ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பது சாத்தியமில்லை என்று முத்தரசன் தெரிவித்து உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான 12 மணி நேரத்துக்குள் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பாஜ ஆளும் திரிபுரா மாநிலத்தில் பயங்கர வன்முறை சம்பவங்கள் அரகேறி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, அங்கு ஜனநாயக முறைப்படி, நியாயமாக தேர்தல் நடைபெறுமா? எனும் கேள்வி எழுந்துள்ளது. 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், சாத்தியமே இல்லை என தெரிந்தும், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ எனும் முடிவை பாஜ முன் வைத்து வருகிறது. இந்த ஆண்டில் 9 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல், 2024ல் நாடாளுமன்றத் தேர்தல், 2026ல் தமிழ் நாடு உள்பட  இன்னும் சில மாநிலங்களில் சட்டமன்றத்  தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ கூறி மாநில ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது. இது ஜனநாயக விரோதமும் ஆகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்றிய பாஜ அரசின் இந்த முயற்சியை நிராகரிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான அரசு என பாஜ கூறிக்கொண்டாலும், தற்போது டெல்லியில் மகளிர் ஆணையத் தலைவரே கடுமையாக தாக்கப்பட்டு பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளார். தவிர பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்றி பயத்துடன் வாழும் சூழலே நிலவி வருகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களை மாநில அரசு எக்காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதை வலியுறுத்தி ஜனவரி 24ம் தேதி ஏஐடியூசி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் 500 மையங்களில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *