தமிழ்நாட்டில் கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண். 25 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நாள் 07/01/202ன் படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் மற்றும் இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 10/01/2022 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் மருத்துவம் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முனைவர் வெ,இறையன்பு, இ,ஆ.ப உலக சுகாதார நிறுவனத்தில் முதுநிலை ஆரய்ச்சியாளர்கள் மருத்துவர் சௌமியா சாமிநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், ஓமைக்ரான் வைரஸை கருத்தில் கொண்டும், பண்டிகை காலமென்பதால் நோய்த்தொற்று அதிகம் பரவும் என்பதாலும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 30/01/2022 வரை நீட்டிக்கப்படும்.

அதன்படி  14/01/2022 முதல் 18/01/2002 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.  வழக்கம் போல 16/01/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு.  பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கையில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.  தற்போது ஊரடங்கு காலங்களில் தடைசெய்யப்பட்ட அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.

பொது அறிவுரைகள் :

1) இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பின், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

2) கடைகளின் நுழைவுவாயிலில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் சுத்திகரிப்பான் கட்டாயமாக வைக்கப்படுவது, உடல் வெப்பநிலையை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும், கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

3) வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.  அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதியை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.  இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.  நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக நோய் தொடர்பாக வீடுவீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.  நோய் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களை ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.

தற்போது கொரோனா நோய் வேகமாக பரவி உள்ளதால் பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படுவது மாநகராட்சி ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.  கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாமல் தொடர்ந்து செயல்படும் வணிக வளாகங்கள் கடைகளை மூட பெருநகர சென்னை மாநகர மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *