பெண் மருத்துவருக்கு டார்ச்சர்: அரசு டாக்டர் அதிரடி கைது.,

Estimated read time 1 min read

ஈரோடு:

பெண் மருத்துவரிடம் ரூ.10 லட்சம் கேட்டு டார்ச்சர் செய்ததாக அரசு டாக்டரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு காசிபாளையம் அடுத்த கே.கே.நகரை சேர்ந்த தர்மராஜ் மகள் திவ்யா சரோனா (35). இவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2010ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விளாங்குடி மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சம்பத் மகன் அனுப் (36) என்பவருடன் திருமணம் நடந்தது. அனுப் மார்த்தாண்டம் எடக்கோடு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திவ்யா சரோனாவின் திருமணத்தின்போது 117 பவுன் நகை, ரூ.32 லட்சத்தை அவரது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் அனுப்பின் தந்தை சம்பத்தின் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனுப், திவ்யா சரோனாவிடம் மேலும் ரூ.10 லட்சத்தை வாங்கி வர சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, கடந்த 2013ம் ஆண்டு முதல் கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், அனுப்பிற்கு வேறொரு பெண் மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டு, திவ்யா சரோனாவிற்கு வழங்கப்பட்ட 117 பவுன் நகை மற்றும் ரூ.32 லட்சத்தை வங்கி லாக்கரில் எடுத்துக் கொண்டு தலைமறைவானார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசில் திவ்யா சரோனா புகார் அளித்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து திவ்யா சரோனா, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன்பேரில், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஈரோடு தாலுகா போலீசார் அனுப்பை பிடித்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அனுப் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours