சென்னை :

குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்கள் மீண்டும் சரியான விவரங்களை அளித்த பின்னர் அவை மீண்டும் சரிபார்க்கப்பட்டு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நகை கடன் தள்ளுபடி கிடைக்காதது போல செய்திகள் வெளியாகின. இதையடுத்து நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகைக் கடன்கள் வழங்கியதில் எவ்வாறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பதையும் முறைகேடுகள் நடைபெற்றுள்ள மாவட்டங்களையும் ஆதாரத்துடன் விளக்கி உள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முதலாக நகைக் கடன் தள்ளுபடியை அறிவித்தது தமிழக அரசு தான் என்பதை சுட்டிக் காட்டிய அமைச்சர், 100%ஆய்வுக்குப் பிறகே நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தபடி 14 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு 6,000 கோடி ரூபாய் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தள்ளுபடி பெற வேண்டும் என்பதற்காக ஒரே நபர் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்டு நூற்றுக்கணக்கான நகைக் கடன்களை வைத்து இருப்பதால் நகை கடன்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையான நகைக் கடன்கள் பெற தகுதியில்லை என்று தெரிவித்த அமைச்சர், ஆய்வுக்கு பிறகு கிராமுக்கு உட்பட்டு நகைக் கடன் வைத்தவர்களின் எண்ணிக்கை 22, 52,226 ஆக இருப்பதாகவும் இவர்களில் 10,18,66 பேர் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *