செய்தித்தாள் நிறுவனங்களின் அனுமதியின்றி இ-பேப்பர்கள், பி.டி.எப்.,களை சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல செய்தி நிறுவனங்களின் செய்தித்தாள்கள், புத்தகங்களை பி.டி.எப்.,ஆக மாற்றி வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கென குழு அமைத்து வெவ்வெறு புத்தகங்கள், செய்தித்தாள்களை குழுவில் உள்ளோருக்கு பகிர்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக பரப்படும் இந்த பி.டி.எப்.,களை பலரும் டவுன்லோட் செய்து படிக்கின்றனர்.

உண்மையில், பதிப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் வர்த்தக முத்திரைகள் சட்டம், 1999 ஆகியவற்றின் படி, தனிநபர்கள் இ-பேப்பர்களை அல்லது தனியாருக்குச் சொந்தமான வெளியீட்டின் எந்தப் பக்கத்தையும் பகிரக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும். அதன்படி, சமூக வலைதள குழுக்களில் செய்தித்தாள்களை பகிர்வதை எதிர்த்து பல செய்தித்தாள் அமைப்புகளும் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

அந்த வகையில், ஹிந்தியில் வெளியாகும் டெய்னிக் பாஸ்கர் என்னும் செய்தித்தாள் நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் தங்களது செய்தித்தாளின் இ-பேப்பரை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வதாக குறிப்பிட்டு, 85 குழுக்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், இ-பேப்பர்களை அனுமதியின்றி சட்டவிரோதமாக பரப்பும் வாட்ஸ்ஆப் குழுக்களை நீக்க அல்லது முடக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அடுத்தாண்டு மே 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டில்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் பகிர்பவர்களுக்கும் சேர்த்த எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், பதிப்புரிமை, காப்புரிமை சட்டப்படி இது சட்டப்படி குற்றம் என்பதால், பகிர்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயலாம். என்பதால் அட்மின்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

ஏற்கனவே செய்திதாள்களை பகிர்ந்த பல டெலிகிராம் குழுக்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *