சேலம்;

சேலம் பள்ளப்பட்டி கோடி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் முருகன், தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா. இவர்களின் மகள் தீபிகா (வயது 10). இவள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

வீட்டில் கழிப்பிட வசதி இல்லாததால் நேற்று காலையில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக
மாணவி தீபிகா பள்ளப்பட்டி ஏரி கரையோரம் நடந்து சென்றாள். மகள் வெளியில் சென்று
வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளப்பட்டி
ஏரிக்கரைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது மாணவி தீபிகா அணிந்திருந்த காலணி கரையோரத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறிது தூரத்தில் ஏரியின் ஆழமான பகுதியில் மாணவி தீபிகாவின்
உடல் மிதந்ததை கண்டு கதறி அழுதனர். இதையடுத்து ஏரியில் மூழ்கி மாணவி பலியான
தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. உடனே அந்த பகுதியில் வசிக்கும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏரி பகுதியில் கூடினர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஏரியில் மூழ்கி
மாணவி பலியானது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இது குறித்து போலீசார் கூறியதாவது: –

மாணவி தீபிகா இயற்கை உபாதை கழிப்பதற்காக ஏரி பகுதிக்கு சென்றபோது தவறி ஆழமான
பகுதியில் விழுந்து உள்ளார். சிறுமி விழுந்த இடத்தில் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவு நீர்
கலந்து தேங்கி உள்ளது. இதனால் சாக்கடை கழிவு நீரில் மூழ்கி மூச்சுத்திணறி சிறுமி இறந்தாளா? என்று விசாரித்து வருகிறோம்.

மேலும் அந்த மாணவி சிறுமி என்பதால் அவரை யாரேனும் நீரில் மூழ்கடித்து கொலை
செய்து விட்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். ஏரியில் சிறுமி பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *