புது டெல்லி;

டெல்லியில் இயங்கி வரும் மோஹல்லா மருத்துவமனையில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அம்மருத்துவமனையை சேர்ந்த 3 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை கூறும்போது, கடந்த ஜூன் 29-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை மட்டும் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் (இருமல் மருந்து) நச்சு காரணமாக 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்று முதல் ஆறு வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் பெரும்பாலான குழந்தைகள் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு 4 பேர் அடங்கிய விசாரணை குழு ஒன்றை அமைத்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியது:-

டெக்ஸ்ட்ரோமெத்தோர்பன் மருந்து பெரும்பாலும் இருமலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அந்த மருந்தை அதிக அளவில் உட்கொண்டால் தூக்கமின்மை, மயக்கம், வாந்தி, மூச்சு திணறல், வயிற்றுபோக்கு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்து தயாரிப்பை நிறுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.இருமல் மருந்தால் 3 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், சுகாதாரத்துறை மந்திரி ஜெயின் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இறந்த 3 குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடியும், இதற்கு முன் இழந்த 13 குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும் இழப்பிடும் வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *