திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் பழனி குளத்து ரவுண்டானாவில் உள்ள வேல் சிலையை உடைத்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில் , வேல் உடைக்கப்பட்டதை அடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக தைப்ப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்காலங்களிலும், பக்தர்கள் கூட்டம் ஆயிரம் மடங்கு அதிகரித்துக்காணப்படும். தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பழனியிலும் மலைக் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம்ம் அதிகரித்துள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் வாகன நெருக்கத்துடன் காணப்படுகிறது.

பழனியில் வேல்சிலை

வருகை தரும் பக்தர்களை கவரும் வகையில், பழனி கோவில் நிர்வாகம் சார்பில் தங்கும் விடுதியில் செப்ஃபி பாய்ண்டும், பழனி பேருந்துநிலையம் அருகே குளத்துரோடு ரவுண்டானாவில் பளிங்கு கற்களால் ஆன வேல் சிலை வைக்கப்பட்டுஉள்ளது. இதற்கு தினமும் பக்தர்கள் மாலை அணிவிப்பர். மேலும் பழனியின் அடையாளமாகவும் இது விளங்குகிறது.

வேல் சிலையை உடைத்த மர்மநபர்

இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் திடீரென வேல் ரவுண்டானா மீது ஏறி அதில் உள்ள வேல் சிலையை தாக்கி உடைத்தார். இதனால் அது கீழை சாய்ந்து இரண்டாக உடைந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் உடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த பழனி நகர போலீசார் விரைந்து வந்து சிலையை உடைத்த நபரை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்து அமைப்பினர் போரட்டம்

இதற்கிடையே வேல் சிலை உடைக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதையடுத்து இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் சிலையை உடைத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக சிலையை நிறுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலை வைக்க போலீசார் உறுதி

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து டி.எஸ்.பி சத்தியராஜ் பேச்சுவார்த்தை நடத்தி 24மணி நேரத்தில் மீண்டும் வேல் சிலையை வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்தொடர்ந்து போலீசார், சிலையை உடைத்த நபர் மனநலம் பாதித்தவரா, அல்லது போதை நபரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *