கோவை:

கோவை மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஆசிரியர் தொடர்ந்து அளித்த பாலியல் தொல்லையால் 16 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்த புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்,

பாலியல் தொல்லை

ஆர்எஸ்புரம் சின்மயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்தவர் மிதுன் சக்ரவர்த்தி. இவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கடுமையாக மன ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி 6 மாதங்களுக்கு மேலாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக அவருடன் படித்த மாணவர்கள் கூறுகின்றனர்.

கைப்பட எழுதிய கடிதம்

இந்தச் சூழலில் கடந்த நவம்பர் மாதம் கோவை மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தொடர்ந்து பல திடுக்கிட்டுக்கும் தகவல்களும் வெளியானது. அந்த மாணவி உயிரிழக்கும் முன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆசிரியரின் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களை எல்லாம் சும்மா விடாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

 

கைது

இதையடுத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும், மாணவி புகார் அளித்த பின்னரும், அலட்சியமாக இருந்துவிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

குண்டர் சட்டம்

இந்தச்சூழலில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டம் பாயந்ததான் காரணமாக அடுத்த ஓராண்டுக்கு அவரால் சிறையிலிருந்து வெளி வர முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *