கரூர்:

மத்திய அரசின் நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதில் மாவட்ட ஆட்சியருக்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி கரூர் கலெக்டர் ஆபிஸில் காலை முதலே தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் ஜோதிமணி எம்.பி. கூட்டணிக் கட்சியின் பெண் எம்.பி. ஒருவர் தர்ணா செய்து வரும் நிலையில், அவரிடம் மாவட்ட அமைச்சரான செந்தில்பாலாஜி என்ன ஏது என்று கூட அழைத்துப் பேசவில்லை என்ற தகவல் ஒன் இந்தியா தமிழுக்கு கிடைத்திருக்கிறது. இதனிடையே கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எம்.பியை ஒன் இந்தியா தமிழ் தொடர்புகொண்ட போது நம்மிடம் பல புதிய தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

சமூக நீதி

”மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பெங்களூருவில் இயங்கி வரும் (Artificial Limbs Manufacturing Corporation of India) Alimco என்ற மத்திய அரசின் நிறுவனம் மூலம் உதவி உபகரணங்களுக்கான அளவு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கேற்றவாறு செயற்கை கால், விரல் உள்ளிட்ட உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.”

ஒவ்வொரு ஊரிலும்

”அந்த வகையில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6,800 கிராமங்களில் 6,300 கிராமங்களுக்கு இதுவரை நான் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் 10 முதல் 15 பேர் வரை மாற்றுத்திறனாளிகள் தன்னை சந்தித்து உதவி உபகரணங்கள் பெற்றுத்தருமாறு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து நான் இதற்காக கடும் முயற்சி மேற்கொண்டதன் பேரில் மத்திய அரசு நிதி ஒதுக்கியது. அவ்வாறு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்துவதில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கருக்கு ஏன் தயக்கம் என்பது தான் என்னுடைய கேள்வி.”

6 மாதமாக

”6 மாதமாக இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் பேசி வருகிறேன், கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் நிதியின் கீழ் உதவி உபகரணங்கள் வழங்க முகாம்கள் நடத்துமாறு பலமுறை போராடியிருக்கிறேன். என்ன காரணத்தாலோ கலெக்டர் இந்த விவகாரத்தை இழுத்தடித்து வந்ததால் ஒரு மாதத்துக்கு முன்பு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அவர் கரூர் கலெக்டரை அழைத்து பேசிய பிறகு வேறு வழியில்லாமல் இன்று ஒப்புக்கு ஒரு முகாமை நடத்தி வருகிறார் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.”

வெறும் 90 பேர்

”இன்று நடைபெறும் முகாம் எத்தனை பேர் கலந்துகொண்டுள்ளார்கள் தெரியுமா, வெறும் 90 பேர். இவ்வளவு பேர் தான் இந்த மாவட்டத்திலேயே மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்களா என்பது தான் ஆட்சியருக்கு நான் முன்வைக்கும் கேள்வி. திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர் என நான்கு மாவட்டங்கள் எனது நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. எல்லா கலெக்டர்களும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் அளவு எடுக்கும் முகாமை முறையாக நடத்திவிட்டார்கள்.”

நடத்தக்கூடாது

”திருச்சியில் நடத்தப்பட்ட இந்த முகாமில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் இருந்து மட்டும் 2,000 பேர் கலந்துகொண்டார்கள், அதில் 640 பேர் தகுதிவாய்ந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு தொகுதியிலிருந்து மட்டும் இத்தனை பேர் கலந்துகொண்டார்கள் என்றால் அது குறித்த தகவலை திருச்சி ஆட்சியர் முறையாக எல்லோருக்கும் கொண்டு சேர்த்தார். ஆனால் கரூர் கலெக்டர் அப்படியில்லை, இது போன்ற ஒரு முகாமை நடத்தவே கூடாது என்ற முடிவில் இருந்தார்.”

பேருக்கு முகாம்

”ஒப்புக்கு நேற்று நாளிதழ்களில் மட்டும் சிறிய விளம்பரம் ஒன்றை கொடுத்துவிட்டு இன்று முகாமை தன்னிசையாக நடத்துகிறார். இப்படி ஒரு முகாம் நடத்துகிறோம் என்ற தகவலை எம்.பியான என்னிடமே அவர் தகவல் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் ஊராட்சி வாரியாக தலைவர்கள் துணை தலைவர்களுக்கு தகவல் கூறி, கட்சிக்காரர்கள் மூலம் விஷயத்தை மக்களுக்கு கொண்டு சென்று இந்த முகாமில் அதிகமானோரை பயன்பெற வைத்திருக்கலாம்.”

 

3 ஆண்டுகள்

”மத்திய அரசின் நிதியில் நடத்தப்படும் இந்த முகாமை நினைத்த நேரத்தில் எல்லாம் நடத்த முடியாது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க முடியும். இதை பொறுப்பற்ற முறையில் கரூர் கலெக்டர் வீணடித்துவிட்டார். என்னிடம் உதவி கோரிய ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை இனி எப்படி நான் சந்திப்பேன். மத்திய அரசின் நிதியை பயன்படுத்துவதில் கரூர் கலெக்டருக்கு ஏன் இவ்வளவு தயக்கம் என புரியவில்லை என வெடித்தார் ஜோதிமணி எம்.பி.”

அமைச்சர் பேசவில்லை

இதனிடையே தர்ணாவில் ஈடுபட்டு வரும் உங்களிடம் மாவட்ட அமைச்சர் என்கிற முறையில் செந்தில்பாலாஜி தொடர்பு கொண்டு பேசினாரா என நாம் கேட்டதற்கு, ”அமைச்சர் செந்தில்பாலாஜி இதுவரை என்னிடம் பேசவில்லை, ஏற்கனவே அவரிடம் இது குறித்து பேசிய போது மாவட்ட ஆட்சியர் ஏன் இப்படி செய்கிறார் என தனக்குத் தெரியவில்லை என்று கூறிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்”’ என்ற தகவலையும் ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்டார் ஜோதிமணி எம்.பி.

நேரெதிர்

அமைச்சர் செந்தில்பாலாஜியும், ஜோதிமணி எம்.பியும் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து அரசியல் செய்து வந்த நிலையில் இன்று நேரெதிர் துருவங்களாக மாறி நிற்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் பாஜகவும் தனது பங்குக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜியை நோக்கி விமர்சனக்கணைகளை வீசத்தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கே.எஸ்.அழகிரி

பொதுவாக இது போன்ற விவகாரத்தில் மாவட்ட அமைச்சர் உரிய நபரை தொடர்பு கொண்டு சமாதானம் பேசுவது வழக்கம். இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஜோதிமணி எம்.பி.யை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்ததுடன் இது தொடர்பாக முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்திருக்கிறாராம். இதனால் கரூர் மாவட்ட ஆட்சியரும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் இது குறித்து ஆட்சி மேலிடத்துக்கு பதில் அளிக்க வேண்டிய சூழல் உருவாகும் போல் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *