ஆம்னி பேருந்தின் அரசியல்: விளக்கும் காவல் அதிகாரி!

சாலையைக் கடக்கவும்கூட நேரம் கொடுக்காமல் கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கும் சென்னை மழையில், எதையும் பொருட்படுத்தாமல் விதிமீறும் பேருந்துகளைப் பிடித்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துக்கொண்டிருந்த அந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி வித்தியாசமாகத் தெரிந்தார். அது ஏன்?

குரோம்பேட்டை பேருந்து நிலையம் மிக முக்கியமான இடமாக மாறிவிட்டது. கிண்டி முதல் நுங்கம்பாக்கம் வரையிலும் படர்ந்திருந்த அத்தனைக் கடைகளின் கிளைகளும் தற்போது குரோம்பேட்டையை டார்கெட் செய்துவிட்டன. சரவண பவன் முதல் ஷவர்மா கடை வரை, குரோம்பேட்டையில் இல்லாத கடையோ, கிடைக்காத பொருளோ இல்லை எனலாம். கடைகள் பெருகப் பெருக குரோம்பேட்டையை நோக்கிச் செல்பவர்களும், அதைக் கடந்து செல்பவர்களும் அதிகமாகிவிட்டனர். இதன் காரணமாக சென்னையின் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக குரோம்பேட்டை மாறியிருக்கிறது. இந்த நெரிசலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான காரணம் தாம்பரம் மார்க்கத்திலிருக்கும் பேருந்து நிலையத்தில் நிற்கும் தனியார் ஆம்னி பேருந்துகள்.

 

குரோம்பேட்டை சிக்னலுக்கு அருகிலேயே இருக்கும் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் நிற்கவும், வெளியேறவும் வழி செய்யப்பட்டிருந்தாலும் அவை நெரிசல் ஏற்படாத விதத்தில் வெளியேற முடியாமல் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு அந்த சிக்னலையே ஸ்தம்பித்துப் போக வைக்கின்றன. இது பல மாதமாக அந்தப் பகுதி மக்கள் சொல்லும் புகார்களில் ஒன்று. இத்தனைக் காலமாக தீர்க்கப்படாமல் இருந்த இந்தப் பிரச்னைக்கான தீர்வை நோக்கி நகரும் விதத்தில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் விதத்தில் பேருந்துகளை நிறுத்தும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்தவர் குரோம்பேட்டை போக்குவரத்து காவல் அதிகாரி மணிமாறன்.

மனதில் ஏற்பட்ட எத்தனையோ கேள்விகளை அவரிடம் கேட்டுவிட அறிமுகப்படுத்தியதும் நிறைய பேசினார்.

ரெண்டு இல்லைனா மேக்ஸிமம் மூணு பஸ் நிற்கும் இடம் இது. இப்ப ஆயிரம் பஸ் போகுது. ஆனால், அந்த ரெண்டு அல்லது மூணு பஸ் போனப்ப இருந்த ரோடுதான் இப்ப வரைக்கும் இருக்கு. அவங்க என்ன பண்ணுவாங்க. இங்க வர்ற பஸ் எல்லாத்துக்கும் ஃபைன் போடுறதில்லை. ஆள் ஏத்துனோமா கிளம்புனோமானு இல்லாம ரொம்ப நேரம் காத்துக்கிட்டு இருக்க பஸ்ஸுக்கு தான் ஃபைன் போடுறோம் என்று பேருந்தின் எண்ணை குறித்தபடியே பேசினார்.

மணிமாறனின் கருத்தில் நியாயம் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல், அதனால் உருவாகும் டீசல் செலவு, போலீஸிடம் சிக்கினால் விழும் அபராதம் என இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக செல்லலாமே என்ற கேள்விக்கு ஒவ்வொரு மீட்டரா நகர்ந்து போறதுக்கு இவங்களுக்கு மட்டும் ஆசையா என்ன? இப்ப கிளம்பி பை-பாஸ் வழியா போற ஒரு பிரைவேட் பஸ்ஸைப் பிடிச்சு ஏன் இந்தப்பக்கம் போறீங்கனு கேட்டோம்னு வைங்க, அவங்களுக்கு போர்டிங் பாய்ன்ட் எல்லாமே கோயம்பேடு & பெருங்களத்தூர்ல விழுந்திருக்கிறதா சொல்வாங்க. அவ்வளவு தான். மக்கள் வீட்டு வாசல்லயே பஸ் ஏற ஆசைப்படுறாங்க. அதுக்கு எந்த டிராவல்ஸ் சம்மதிக்குதோ அங்க டிக்கெட் போடுறாங்க. இதனால புக்கிங் குறையும்போது மத்த டிராவல்ஸும் சிட்டி உள்ளே வந்து ஏத்திக்கிட்டு போறாங்க. இதை சர்வீஸ் மாதிரியும் செய்யல. இது தான் கவர்ன்மெண்ட் பஸ்ஸுக்கும், பிரைவேட் பஸ்ஸுக்குமான டிக்கெட் விலை வித்தியாசத்தை அதிகமாக்குது. வீட்டுக்கு பக்கத்துலயே பஸ் வர்றதால டிக்கெட்டுக்கு என்ன விலைன்னாலும் கொடுக்க இவங்க ரெடி. ஆனா, இப்படி ஏறிகிட்டே போற விலை ஒரு டைம்ல இவங்களால கண்ட்ரோல் பண்ணமுடியாத அளவுக்கு வந்ததும் கவர்ன்மென்ட்டை குறை சொல்றாங்க. இப்படி சிட்டி வழியா போற பஸ் அதிகமானதால டிராஃபிக் அதிகமாகுது. அதை சரி பண்ணலன்னு எங்களையும் திட்றாங்க என்று இயல்பில் நடப்பதை விளக்கமாகவே கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *