`என்னைத் தேடி காதல் என்னும் வார்த்தை அனுப்பு 

உன்னைத் தேடி வாழ்வின் மொத்தம் அர்த்தம் தருவேன்’

என்கிற பாடல் தற்போது ரீல்ஸ் மூலமாக மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான இந்தப் பாடல் `காதலிக்க நேரமில்லை’ தொடரின் டைட்டில் சாங். இந்தத் தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தவர் சந்திரா லஷ்மண். `பாசமலர்’ தொடருக்குப் பிறகு கிட்டத்தட்ட 5,6 ஆண்டுகள் கழித்து தமிழில் `கயல்’ தொடரின் மூலமாக மீண்டும் தமிழில் என்ட்ரியாகி இருக்கிறார். ஷூட்டிங் இடைவேளையில் அவரிடம் பேசினோம்.

சந்திரா லஷ்மண்

” ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் சென்னைப் பொண்ணுதான். படிச்சது என்னுடைய கெரியர் தொடங்கியது எல்லாமே இங்க தான். பாசமலர் தொடர் முடிஞ்சதும் சரி கொஞ்ச நாள் பிரேக் எடுக்கலாம்னு முடிவு பண்ணி பிரேக் எடுத்தேன். அந்த சமயம் மலையாளத்தில் `ஸ்வந்தம் சுஜாதா’னு ஒரு தொடரில் கமிட் ஆனேன். அந்த சீரியல் ஷூட் முழுக்கவும் கொச்சின்ல தான். அந்த சீரியலில் 100வது எபிசோடில் செகண்ட் ஹீரோவாக என்ட்ரியானார் டோஷ் கிரிஸ்டி. அவரும் நானும் காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு `அயான்’னு ஒரு பையனும் இருக்காங்க. கல்யாணமாகி பையன் பிறந்தும் 4 மாதம் வரைக்கும் அந்த சீரியல் போச்சு. அதுக்கப்புறம் சீரியல் முடிஞ்சதும் தம்பி கூட நேரம் செலவழிக்கலாம்னு முடிவு பண்ணி மறுபடியும் ஒரு பிரேக்ல இருந்தேன்.

5,6 மாதம் கழிச்சு தமிழில் தான் ரீஎன்ட்ரி கொடுக்கணும்னு விரும்பினேன். அந்த சமயம் வந்த தமிழ் புராஜக்ட் எல்லாம் அவ்ளோ முக்கியத்துவமான கேரக்டராக இல்ல. அதனால பண்ணல. அப்ப தெலுங்கு புராஜக்ட் ஒண்ணு வந்துச்சு. 8 நாட்கள் தான் அதிகபட்சம் டேட்ஸ் இருக்குங்கிறதனால ஓகே சொன்னேன். குழந்தையை எப்படி விட்டுட்டு ஷூட்டிங் போகிறது? அவனாலும் என்னாலும் இருக்க முடியுமான்னு டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம்னு தான் அந்த புராஜக்ட்டே பண்ணினேன். அவனை விட்டுப் பிரிஞ்சு இருந்தது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனா, அவன் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் ஆன பையன். அம்மா, அப்பா இருக்காங்க. ஆனாலும் அவனுக்கு நைட் தூங்கும்போது நான் இல்லைன்னா அவங்க அப்பா இருக்கணும். அவர் சினிமா தான் பண்ணிட்டு இருந்தார். அதனால அவருக்கு பிரேக் இருந்தது அவர் பார்த்துட்டு இருந்தார். 

சந்திரா லஷ்மண்

  `ஸ்வந்தம் சுஜாதா’ பண்ணின விஷன் டைம் புரொடக்‌ஷன் தான் இப்ப `கயல்’ சீரியலும் பண்றாங்க. ஏற்கெனவே அவங்க புரொடக்‌ஷனில் வசந்தம்னு ஒரு தொடரிலும் நடிச்சிருந்தேன். அவங்க தமிழில் இந்தத் தொடருக்காக கேட்டாங்க. நான் கடைசியா பண்ணின சீரியல் வரைக்குமே கதாநாயகியாகத்தான் பண்ணியிருக்கேன். இவங்க முக்கியமான கேரக்டர்னு சொன்னதால ஓகே சொன்னேன். இப்ப அவரும் மலையாளத்தில் ஒரு சீரியலில் கமிட் ஆகியிருக்கார். 15 முதல் 30 வரை அவருக்கு ஷூட். இங்க ஷூட் முடிச்சிட்டு நான் போய் அவனை பார்த்துக்கணும். ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஓடிட்டு இருக்கோம்!” என்றவர் பிரக்னன்ஸி ஜர்னி குறித்துப் பகிர்ந்து கொண்டார். 

“எனக்கு 38 வயதில் தான் திருமணமாச்சு. எனக்கு யாரும் இத்தனை வயசுக்கு மேல எப்படி குழந்தைங்கிற பிரஷரெல்லாம் கொடுக்கல. கடவுள் அருளால திருமணமான ரெண்டே மாசத்துல கர்ப்பமாகிட்டேன். பிரக்னன்சி சார்ந்த எந்தப் பிரச்னையும் இல்ல. அயான் பிறக்குறதுக்கு மூன்று நாட்கள் முன்னாடி வரைக்குமே நடிச்சிட்டு இருந்தேன். நான் பிசிக்கலி ரொம்பவே ஆக்டிவ் ஆன பர்சன். மென்டல் ஹெல்த்தும் ரொம்பவே முக்கியம். நான் என் பையனை ஹீலர்னு தான் கூப்பிட்டுட்டு இருந்தேன். ஆரம்பத்தில் இருந்தே அவன்கிட்ட பேசிட்டே இருப்பேன். அம்மாவுக்கு சோர்வா இருக்கு.. எனர்ஜி கொடு பாப்பான்னுலாம் சொல்லுவேன். அவன் நிஜமாகவே என்னுடைய ஹீலர் தான்!” என்றதும் `காதலிக்க நேரமில்லை’ தொடர் பாடல் குறித்துக் கேட்டோம். 

சந்திரா லஷ்மண்

“வருஷக்கணக்கா இருக்கிற ஒரே ட்ரெண்ட்னா அது அந்தப் பாட்டு மட்டும்தான். எல்லா ஜெனரேஷனுக்கும் இந்தப் பாட்டு பிடிச்சிருக்கு. அந்தப் பாட்டு மட்டுமல்ல அந்தப் புராஜக்ட்டும் எனக்கு ஸ்பெஷல் தான்! இதுவரை அப்படி லிவ்வின் சப்ஜெக்ட் யாரும் எடுக்கல. அந்த சீரியலில் தான் அப்படியொரு கான்செப்ட் இருந்தது. அதுக்கப்புறமும் இதுவரைக்கும் யாரும் அப்படியொரு பிளாட் எடுக்கல. படமாகத்தான் எடுத்தாங்க. அந்தப் பாட்டு பற்றி குறிப்பிட்டு சொல்லணும்னா சிங்கப்பூரில் எங்களுடைய முதல் செட்டியூலுக்காகப் போயிருந்தோம். அங்க தான் இந்தப் பாட்டை அனுப்பியிருந்தாங்க. அங்க நாங்க தங்கியிருந்த ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்த கம்ப்யூட்டரில் இந்தப் பாட்டை போட்டுக் கேட்டோம். முதல் தடவை கேட்கும்போது எனக்கும் சரி, பிரஜினுக்கும் சரி பாட்டு மனசுல பதிஞ்சிடுச்சு. தாமரை அவ்ளோ அழகா வரிகள் எழுதியிருப்பாங்க. சங்கீதாவுடைய குரல் கேட்கவே இனிமையா இருக்கும். விஜய் ஆண்டனி சார் இந்தப் பாட்டுக்கு உயிர் கொடுத்திருப்பார். ஒரு முறை ஹைதராபாத்ல விஜய் ஆண்டனி சாரை மீட் பண்ணப்ப `இந்தப் பாட்டுக்கு நீங்களும் பிரஜினும் அவ்ளோ ஜஸ்டிஃபிகேஷன் கொடுத்திருக்கீங்க’னு சொன்னப்ப அவ்ளோ ஹாப்பியா இருந்தது. அந்த புராஜக்ட் மூலமாகத்தான் பிரஜின் மாதிரி நல்ல பிரண்ட் எனக்கு கிடைச்சிருக்காங்க!” எனப் புன்னகைக்க `கயல்’ தொடர் குறித்துக் கேட்டோம்.

“இந்தத் தொடரில் `ராஜலட்சுமி’ என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தொடர்ந்து கன்டின்யூ ஆகுற மாதிரியான கேரக்டர்னு சொல்லியிருக்காங்க. செட்ல எல்லாரும் ஃப்ரெண்ட்லியாக இருக்காங்க. இப்ப பிஸியா ஷூட் போயிட்டு இருக்கு!” என்றதும் `ஷாட் ரெடி’ என்கிற அழைப்பு வர நம்மிடமிருந்து விடைபெற்றார்.

சந்திரா லஷ்மண்

வாழ்த்துகள் சந்திரா!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *