`என்னங்கடா எங்க வீட்லயே எங்கள அடிக்கிறீங்க?’ என்கிற சிம்புவின் டெம்ப்ளேட்டுக்கு ஆகச்சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறது பெங்களூரு அணி. சின்னச்சாமி ஸ்டேடியத்தில் மீண்டும் ஒரு தோல்வியை அந்த அணி பெற்றிருக்கிறது. இந்த முறை அவர்களின் வீட்டிற்குள் புகுந்து ரகளை செய்திருப்பது கே.எல்.ராகுல் & கோ.

‘உடம்புல பிரச்னை இல்ல. இந்த ஆளோட உடம்பே பிரச்னைதான்!’ என்கிற அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது பெங்களூர் அணி.

டீ காக்

லக்னோவும் பெங்களூருவும் மோதிய இந்தப் போட்டியில் லக்னோ அணிதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. லக்னோ அணி 181 ரன்களை அடித்திருந்தது. இந்த ரன்களே அதிகம்தான். ஏனெனில் ஆர்.சி.பி-யின் பௌலர்கள் ஒரு கட்டத்தில் லக்னோ அணியை 160க்குள் கட்டுப்படுத்துவதைப் போல ஆட்டத்தைக் கொண்டு சென்றிருந்தனர். அப்படி எதுவும் நடந்துவிட்டால் தங்களின் பேட்டர்களுக்குச் சவாலே இருக்காதே என்று நினைத்தார்களோ என்னவோ, கடைசியில் ரன்களை வாரி வழங்கி 181 ரன்களை அடிக்க வைத்தனர். ஃபீல்டர்களும் தங்களின் பங்குக்குத் தாறுமாறாகப் பாய்ந்து கேட்ச்களை டிராப் செய்து போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்க உதவினர். (நம்பி வந்த கிரவுடுக்கு என்டர்டெயின்மென்ட் வேண்டாமா?)

பவர்ப்ளேயில் லக்னோ அணி நன்றாகவே தொடங்கியிருந்தது. 6 ஓவர்களில் 54 ரன்களை எடுத்திருந்தனர். கே.எல்.ராகுல் அவுட் ஆகியிருந்தாலும் டீகாக் நின்று ஆடி ஸ்கோரை உயர்த்திக் கொண்டே இருந்தார்.

மேக்ஸ்வெல்தான் இந்த வேகத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்த உதவினார். 4 ஓவர்களை வீசி 23 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். கே.எல் ராகுல், ஸ்டாய்னிஸ் என இரண்டு முக்கிய பேட்டர்களின் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்திருந்தார். ஆனாலும் லக்னோவின் ரன்ரேட் சீராக உயர்ந்துகொண்டே இருந்தது. யாஷ் தயாள் டெத் ஓவர்களை நெருங்கையில் சிறப்பாக சில ஓவர்களை வீசினார். 15வது ஓவரில் 2 ரன்கள் 18வது ஓவரில் 5 ரன்கள் என மிகச்சிறப்பாக வீசி லக்னோ அணியை 160க்குள் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கினார்.

யாஷ் தயாள்

இடையில் ரீஸ் டாப்ளேவும் 17 வது ஓவரில் 2 ரன்களை மட்டுமே கொடுத்து டீகாக்கின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால், கடைசியில் நிக்கோலஸ் பூரன் வில்லனாக மாறினார். ரீஸ் டாப்ளே வீசிய 19வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் 20 ரன்களைச் சேர்க்க உதவினார். சிராஜின் கடைசி ஓவரில் மேலும் 2 சிக்ஸர்கள். ஸ்கோர் 180 ஐ கடந்தது!

பெங்களூருவுக்கு டார்கெட் 182. லக்னோ பாசிட்டிவ்வாக முடித்திருந்தாலும் இது சேஸ் செய்யக்கூடிய டார்கெட்தான். ஆனாலும், பெங்களூரு கோட்டைவிட்டிருக்கிறது. விராட் கோலி 5வது ஓவரில் அவுட் ஆகியிருந்தார். அப்போதே ஆர்.சி.பி ரசிகர்கள் டிவியை ஆஃப் செய்திருக்கக்கூடும். ஏனெனில் கோலி மட்டும்தான் அந்த அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்தார்.

சின்னச்சாமி மைதானம் கோலி புளுதி பறக்க புகுந்து ஆடும் வேட்டைக்களம். இங்கே நடந்த கடைசி இரண்டு போட்டிகளிலுமே அரைசதத்தைக் கடந்து அதிக ரன் அடித்த வீரராக இருந்தார். மேலும், பெங்களூரு அணிக்கு ஆங்கராக நின்று விக்கெட் விழும்போதும் அணியை மொத்தமாகச் சரியவிடாமல் பார்த்துக்கொண்டார். ஆனால், இந்தப் போட்டியில் கோலியால் அதைச் செய்ய முடியவில்லை. கடந்த போட்டியில் அறிமுகமான தமிழக வீரரான சித்தார்த் மணிமாறன் இந்தப் போட்டியிலும் பவர்ப்ளேக்குள் வீசியிருந்தார். அவரின் ஓவரில்தான் ரிஸ்க் எடுத்து ஆட போய் விராட் கோலி தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். டு ப்ளெஸ்ஸி, பீல்டரை க்ளியரே செய்யாமல் தேவையில்லாமல் ஒரு வேகமான சிங்கிளுக்கு முயன்று ரன் அவுட் ஆனார். இவர்கள் இருவரையும் தாண்டிவிட்டால் அந்த அணியின் நம்பிக்கை மேக்ஸ்வெல்தான். ஆனால், மேக்ஸ்வெல் இந்த சீசனில் இன்னும் ஸ்பார்க்கே காட்டவில்லை. முக்கியமான இந்தப் போட்டியிலும் டக் அவுட்டே ஆகியிருந்தார்.

கோலி

பெங்களூரு அணியின் KGF எனச் சொல்லப்படும் இந்த மூவரும் ஒரு போட்டியில் சேர்ந்து சொதப்பினால் அந்தப் போட்டியை பெங்களூரு வெல்லவே வெல்லாது என உறுதியாகச் சொல்லிவிடலாம். அதுதான் நடந்திருந்தது. பின்னால் வந்த வீரர்கள் ஆறுதல் ஆட்டமே ஆடியிருந்தனர்.

மயங்க் யாதவ்

பெங்களூரு அணியின் மிடில் ஆர்டரை லக்னோ அணியின் வேகப்புயல் மயங்க் யாதவ் உடைத்துப் போட்டார். ரஜத் பட்டிதர், மேக்ஸ்வெல், க்ரீன் என மூன்று பேரின் விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்திருந்தார். கடந்த போட்டியை போலவே இந்தப் போட்டியிலும் 150 கி.மீக்கும் அதிகமாக அநாயசமாக வீசினார். ஒரு பந்தை 157 கி.மீ வேகத்திலும் வீசியிருந்தார். இந்த சீசனின் வேகமான பந்து அது! மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பஞ்சாபுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் பேர்ஸ்ட்டோவை வேகத்தால் தடுமாற வைத்திருந்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் மேக்ஸ்வெல், க்ரீன் இருவரையும் தடுமாற வைத்திருந்தார். இவர்கள் எல்லாம் வேகப்பந்து வீச்சு பாரம்பரியம் கொண்ட இடங்களிலிலிருந்து வருபவர்கள். இவர்களையே தடுமாற செய்கிறார் எனில் மயங்க் யாதவ் உண்மையிலேயே சிறப்பான திறனை உள்ளடக்கி வைத்திருக்கும் பௌலர்தான். ஆக, அவரிடமிருந்து இன்னும் சிறப்பான சம்பவங்கள் பலவற்றையும் எதிர்பார்க்கலாம். தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார். ஓர் இந்திய வேகப்புயல் கிரிக்கெட் உலகை சுழன்றடிக்கத் தயாராகிறது.

மேக்ஸ்வெல்

“எங்கள் பௌலிங் சிறப்பாக இல்லை. நாங்கள் கேட்ச்சுகளை டிராப் செய்தோம். இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப்கள் தேவைப்பட்டன. அதையும் எங்களால் உருவாக்க முடியவில்லை!” எனப் புலம்பித் தள்ளியிருக்கிறார் பெங்களூரு அணியின் கேப்டன் டு ப்ளெஸ்ஸி. எதாவது ஒரு பக்கம் ஓட்டை என்றால் சமாளிக்கலாம். இருக்கிற மூன்று பக்கமும் ஓட்டை என்றால் கேப்டனால் என்னதான் செய்ய முடியும்? பரிதாபம்தான்!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *