தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறுக்கு சாலை பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார். முன்னதாக அவருக்கு, ஓட்டப்பிடரம் கிழக்கு ஒன்றியச் செயலாளரும், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் துணைத் தலைவருமான காசி விஸ்வநாதன் கிரேன் மூலம் சுமார் 100 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட ரோஜா மாலையை அணிவித்தார். தொடர்ந்து பேசிய கனிமொழி, “இந்த தேர்தல் என்பது மிக முக்கியமான ஒரு தேர்தல். நம்முடைய உரிமைகளை மீட்க மற்றும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்றால், அதற்கு மத்திய ஆட்சியில் மாற்றம் வர வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்.

கிரேன் மூலம் அணிவிக்கப்பட்ட பிரமாண்ட ரோஜா மாலை

டெல்லியில் விவசாயிகள் போராடியபோது ஓர் அமைச்சரின் மகன் அவர்கள்மீது கார் ஏற்றி நான்கு விவசாயிகளை கொலை செய்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள்மீது தடியடி நடத்தப்பட்டது. 2 பெண்கள் உட்பட  13 பேரைச் சுட்டுக் கொன்றது அ.தி.மு.க ஆட்சி. பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் ஸ்டெர்லைட் ஆலையை  மூடக் கூடாது என்று போராடின. ஆனால், நமது முதலமைச்சர் ஸ்டாலின்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று வாக்குறுதி அளித்ததுபோல, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதங்கள் வலுவாக எடுத்து வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையும்  மூடப்பட்டது.  இதனால், வேலை வாய்ப்பு பறிபோகும் என்றெல்லாம் கூறினார்கள். அதற்கு மாறாக உலகிலேயே மிகப்பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலையான ’வின்பாஸ்ட்’  ஆலை தூத்துக்குடியில் ரூ .16 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது.

 தூத்துக்குடியில் டைட்டில் பார்க் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது, மேலும் கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளிலும் டைட்டில் பார்க் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் இரண்டு முதலமைச்சர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஒரு துணை முதலமைச்சர் ஒன்றரை ஆண்டுகளுக்கும்  மேலாக சிறையில் உள்ளார். தற்பொழுதுதான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்றால் தேர்தல் வருகிறது என்று அர்த்தம். வாரத்தில் 7 நாள்கள்தான் உள்ளது. 8 நாள்கள் இருந்தால் 8 நாள்களும் தமிழ்நாட்டுக்கு வந்துவிடுவார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவில் கறுப்புப் பணம் அனைத்தும் ஒழிக்கப்படும் எனக் கூறினார். கறுப்புப் பணம் ஒழிந்ததா என்றால் இல்லை.

பிரசாரத்தில் கனிமொழி

நாம்தான் நமது பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளானோம். எப்படி ஆங்கிலேயர்கள் ஒரு காலகட்டத்தில் நம்முடைய உரிமைகள், உடைமைகளைப் நம்மிடமிருந்து பறித்து எடுத்துச் சென்றார்களோ, அதே போல இந்த பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை ஜி.எஸ்.டி என்ற பெயரால் எல்லாவற்றையும் பிடுங்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அரசியல் லாபத்திற்காக பா.ஜ.க மக்களிடையே பிரச்னைகளை உருவாக்கி அவர்களைப் பிரித்து,  இருக்கக்கூடிய மக்களை நிம்மதி இல்லாமல் தவிக்கக்கூடிய சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்கு ஒரு உதாரணத்தை நான் சொல்ல வேண்டும் என்றால் மணிப்பூர்.

பா.ஜ.க ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற மாநிலம்தான். அந்த மணிப்பூரில் இரண்டு இனக் குழுக்களுக்கு இடையே பிரச்னைகளை தூண்டி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி துப்பாக்கியில் சுட்டுக் கொண்டு, வீடுகளை எரிக்கக்கூடிய சூழல். அங்கே இரண்டு குழுக்களுமே அவர்கள் வீட்டில் இல்லை, எல்லாருமே முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பெண்கள், குழந்தைகள், வயது முதியவர்கள், மருந்து இல்லை மாத்திரை இல்லை, பால் இல்லை, சாப்பிடவில்லை…. அடிப்படை தேவைகள்கூட இல்லாத ஒரு சூழல். நாளை அவர்களுடைய எதிர்காலம் என்னவாகும்… அவர்களால் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியுமா முடியாதா என்ற நிலை. உலகம் முழுதும் சுற்றி வரக்கூடிய நரேந்திர மோடி அவர்கள் அங்கே மணிப்பூருக்குச் சென்று கண்ணீரோடு நிற்கக்கூடிய மக்களைக் ஒருமுறைகூட சந்தித்தது இல்லை.

கிரேன் மூலம் அணிவிக்கப்பட்ட ரோஜா மாலை

இப்போது கச்சதீவைப் பற்றிப் பேசுகிறார்கள், திடீரென்று இந்த தேசத்தின்மீது அக்கறை கொண்டு தமிழர்கள்மீது அக்கறை கொண்டவர்கள் போலப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி என்ன செய்தாலும்… ஏன், தமிழ்நாட்டிலேயே அவர் தங்கியிருந்தாலும் மக்கள் பா.ஜ.க-விற்கு வாக்களிக்க மாட்டார்கள். பா.ஜ.க என்றுமே நோட்டவுக்குக் கீழ்தான். சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி மக்களிடம் நேரடியாகச் சந்தித்து வாக்குகளை சேகரித்து வருவது தி.மு.க, ஆனால், பா.ஜ.க-வோ இதுவரை சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களைச் சந்திக்கிறது.” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *