சென்னை: ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் அதிவேகத்தில் அஜித் கார் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு ‘விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் மும்முரமாக நடைபெற்று வந்தது. அண்மையில் மத்திய பிரதேசத்துக்கு பைக் பயணம் மேற்கொண்ட அஜித் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.
இதனையடுத்து தற்போது மீண்டும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் கார் ஓட்டும் வீடியோ ஒன்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகர் ஆரவ், கைகள் கட்டப்பட்ட நிலையில், தனது அருகே அமர்ந்திருக்க ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அஜித் அதிவேகத்தில் காரை ஓட்டுகிறார். வீடியோவின் இறுதியில் கார் நிலைதடுமாறி கவிழ்கிறது. இது விபத்தாக நடந்ததா அல்லது படப்பிடிப்புக்காக காரை வேண்டுமென்றே அஜித் கவிழ்த்தாரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.