புதுடெல்லி: அவசர கால நடவடிக்கையின் ஒருபகுதியாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களை தரையிறக்கி இந்திய விமானப்படை ஒத்திகை நடத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹரா பகுதியில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் தரையிறக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது.

இந்திய விமானப்படையில் உள்ள அமெரிக்காவின் தயாரிப் பான சினூக் உள்ளிட்ட 5 ஹெலிகாப்டர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றன. இந்த சோதனை நேற்று அதிகாலை 2.50 மணிக்கு நடத்தப்பட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை ஹெலிகாப்டர்களை தரையிறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஒத்திகைக்கு அவசரகால தரையிறக்கும் வசதி (இஎல்எஃப்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆந்திரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள நெடுஞ்சாலைகளும் விமானங்கள், ஹெலிகாப்டர்களை அவசரகாலத்தில் தரையிறக்குவதற்கு ஏற்ப தயார் செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு தற்போதுதான் ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் தரையிறக்கிப் பார்க்கப்பட்டுள்ளன.

இந்த ஒத்திகையின்போது 2 சினூக் ரக ஹெலிகாப்டர்கள், ஒரு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர், 2 இலகு ரக ஹெலிகாப்டர்கள் (ஏஎல்எச்) என மொத்தம் 5 விமானப்படை ஹெலிகாப்டர்கள் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்பு: ஹெலிகாப்டர்களை தரையிறக்கி ஒத்திகை பார்க்கும் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும், எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனையின்போது நெடுஞ்சாலையில் பலத்த போலீஸ்பாதுகாப்பும், ராணுவப்படையினர் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தன. மேலும் நெடுஞ்சாலையையொட்டி ரேடார்கள், தொழில்நுட்பக் கருவிகள், கண்காணிப்புக் கேமராக்களும் வைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்பு நடவடிக்கையாக மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு இருந்தன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *