விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘அண்டா கா கசம் 2’. வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகிறது. வரும் வாரம் ஒளிபரப்பாக வேண்டிய நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நேற்றைய தினம் (28/1/24) சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி. செட்டில் நடந்தது.

பிக் பாஸ் 7-வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனன்யா, அக்‌ஷயா, விஷ்ணு, விசித்ரா, ரவீனா, தினேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே விசித்ரா ஒரு பிரச்னையைக் கிளப்பியதாகவும், அதன் காரணமாக ஷூட்டிங் சில மணி நேரத்திற்கு தடைபட்டதாகவும், இருந்தும் கடைசியில் விசித்ரா கோபித்துக் கொண்டு ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமலேயே அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. அங்கு என்ன நடந்தது என அந்த நிகழ்ச்சி தொடரபான சிலரிடம் பேசினோம்.

அண்டாகாகசம் 2

”இந்த நிகழ்ச்சி குறித்து எல்லோருக்கும் தெரியும். பிக் பாஸ் போட்டியாளர்களிடமும் இந்த நிகழ்ச்சி குறித்த விஷயங்களைச் சொல்லித்தான் கூப்பிட்டோம். அவங்களும் வந்துட்டாங்க. எல்லாரும் தயாராகி ஷூட் தொடங்கற நேரம் வந்ததும், விசித்ராதான் ‘தினேஷ், என் டீம்ல இருந்து கேம் ஆடணும்’னு கேட்டாங்க. 

டீம் டீமா விளையாடற கேம்னாலும் சம்பந்தப்பட்டவங்களுடைய சம்மதம் இதுக்கு அவசியம்கிறதால யூனிட் தினேஷ்கிட்ட சம்மதம் கேட்க வேண்டியது அவசியம்னு நினைச்சு கேட்டுச்சு.

ஆனா தினேஷ் அதுக்குச் சம்மதிக்கலை. ‘விசித்ரா கூட எந்தவொரு நிகழ்ச்சியிலயும் கலந்துக்கறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதேநேரம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருந்தப்பவே என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பத்தியெல்லாம் பேசினாங்க. வெளியில வந்துமே அவங்களுடைய சில கருத்துகள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில தலையிடற மாதிரியே எனக்குப் பட்டுச்சு. இப்ப திடீர்னு வந்து எங்கூடதான் நின்னு கேம் ஆடுவேன்னு சொல்றாங்கன்னா, அவங்க ஏதோ நோக்கத்துடன் வந்திருக்கிறதா எனக்குப் படுது. அதனால இது சரியா இருக்காது. தேவையில்லாத சங்கடங்களைத்தான் உருவாக்கும்.

தவிர, அவங்க தொடர்ந்து என்னைப் பத்திச் சொன்ன கருத்துகள் என் ஃபேமிலி, ரசிகர்கள் பலரையும் காயப்படுத்தியிருக்கு. இந்தச் சூழல்ல நான் அவங்ககூட சேர்ந்து நிற்பதை அவங்களுமே ரசிக்க மாட்டாங்க’னு சொல்லிட்டார்.

‘பிக்பாஸ்’ தினேஷ்

இதுக்கு மேல அவரை எப்படி கன்வின்ஸ் செய்யறது? அதனால விசித்ரா மேம் கிட்ட, ‘இது ஒரு ஃபன் கேம். யார் யார் கூட இருந்து ஆடறதுங்கிறது முக்கியமல்ல. நிகழ்ச்சி என்டர்ட்யென்மென்டா இருந்தா போதும். அதனால ப்ளீஸ், வாங்க ஷூட் போகலாம்’னு கூப்பிட்டோம்.

ஆனா விசித்ரா அப்பவும் சம்மதிக்கலை. ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் நான். என் கருத்துக்கு நீங்க தர்ற மதிப்பு இவ்ளோதானா’ எனக் கேட்டபடி ஷூட்டிங்கிற்குத் தயாராகாமல் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்து கொண்டார்.” என்றார்கள். நிகழ்ச்சியின் யூனிட் கெஞ்சாத குறையாக எவ்வளவோ பேசிப் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. கடைசியில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமலேயே அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாராம்.

வேறு வழியில்லாமல் யூனிட் கடைசியில் ரவீனாவுடன் வந்திருந்த அவரது உறவினர் ஒருவரை விசித்ராவுக்குப் பதிலாகச் சேர்த்து ஷூட்டிங்கை நடத்தியிருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டிலிருந்த போது விசித்ரா தினேஷ் -ரச்சிதா விவகாரம் குறித்துக் கேமரா முன்பாகப் போய், ‘இவர் கூட ஒரு பொண்ணு எப்படித்தான் குடும்பம் நடத்த முடியும்’ என்கிற ரீதியில் ரச்சிதாவுக்கு மெசேஜ் சொல்வது போல் பேசிய எபிசோடைப் பார்த்திருப்பீர்கள். விசித்ராவின் இந்தப் பேச்சை தினேஷ் ஆதரவாளர்கள் மட்டுமல்ல அந்த வார இறுதியில் கமலுமே கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருந்தபோது அவருக்கு வெளியிலிருந்து பி.ஆர். ஒர்க் செய்த சிலர் தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பதிவிட்ட எதிர்மறையான கருத்துகளுமே தினேஷ் தரப்பை ரொம்பவே வருத்தத்திலும் கோபத்திலும் தள்ளியிருப்பதாகச் சொல்கின்றனர் அவரது நட்பு வட்டத்தினர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *