லக்னோ: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனையான தீப்தி ஷர்மா உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி ஷர்மா. 26 வயதாகும் தீப்தி ஷர்மா, சமீப காலமாக இந்திய அணியில் ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ள அவர் பல நெருக்கடியான சமயங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை சமீபத்தில் தீப்தி ஷர்மா படைத்தார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை பொறுத்தவரையிலும், டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையையும் தீப்தி ஷர்மா பெற்றார். ஆடவர் அணியைப் பொறுத்தவரை டி20 போட்டிகளில் யுஸ்வேந்திர சாஹல் அதிகபட்சமாக 91 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அவத்புரி பகுதியைச் சேர்நதவர் தீப்தி ஷர்மா. இதே பகுதியை சேர்ந்த தீபக் சாஹர் போன்றவர்களுடன் சேர்ந்து தனது கிரிக்கெட் திறமையை வளர்த்துக்கொண்ட இவர், 2014ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 194 போட்டிகளில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

டிசம்பர் 2023-ல், ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருது தீப்திக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் இரண்டாவது இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநில அரசு அவரை துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமித்துள்ளது. இதற்கான ஆணையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வழங்கினார். கூடவே, தீப்திக்கு விருது மற்றும் 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கியும் கவுரவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *