“என்னால் முடியவில்லை. என்னால் வெற்றியை நோக்கி நகர இயலவில்லை. தோற்றுக் கொண்டே இருக்கிறேன். நான் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தப் போகிறேன்.” – மனமுடைந்துப் போய் வேதனையில் ரோஹன் போபண்ணா தனது மனைவியான சுப்ரியாவிற்கு அனுப்பிய வீடியோ பதிவு இது.

நாள்கள் நகர்கின்றன. காலம் அத்தனையையும் சரி செய்கிறது. இன்றைக்கு தனது ஆஸ்திரேலிய இணையுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய ஓப்பனை வென்றுவிட்டு கம்பீரமாக நிற்கிறார் போபண்ணா. மேலும், இன்றைய தேதிக்கு உலகளவில் இரட்டையர் பிரிவில் நம்பர் 1 டென்னிஸ் வீரரும் அவர்தான். சில நாள்களுக்கு முன்புதான் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதையும் அறிவித்திருந்தது. 43 வயதில் இன்னல்கள் அத்தனையையும் கடந்து அனைவருக்குமான ஊக்கமாக மாறியிருக்கிறார் போபண்ணா.

Rohan Bopanna

ஆஸ்திரேலிய ஓப்பனின் இறுதிப்போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த சைமோன் – வாவசோரி இணையை போபண்ணா – மேத்யூ எப்டன் இணை 7-6 (7-0), 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்திய மாத்திரத்திலேயே, “உங்களுக்கான தருணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். போபண்ணாவை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். 43 வயதில் ஆஸ்திரேலிய ஓப்பன் போன்ற பிரமாண்ட மேடையில் அவர் சாதித்துக் காட்டியிருக்கிறார். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து கனவு காணுங்கள். எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள். உங்களுக்கான நேரம் வரும்போது அசத்திவிடுங்கள்!” என சச்சின் போபண்ணா பற்றி எழுதியிருக்கிறார்.

சச்சினின் வார்த்தைகளில் கொஞ்சம் கூட மிகையில்லை. அவர் பயன்படுத்தியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் போபண்ணாவின் வலியையும் போராட்டத்தையும் அப்படியே விளக்கியிருக்கிறது. போபண்ணாவைத் தவிர்த்து இந்தியா சார்பில் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்சா என மூன்றே மூன்று பேர்தான் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கின்றனர்.

இந்தியா சார்பில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருப்பது லியாண்டர் பயஸ்தான். கிராண்ட்ஸ்லாம் போக ஒலிம்பிக்ஸிலும் பதக்கம் வென்றிருக்கிறார். அவரிடம் கேட்டாலே இந்தியாவில் டென்னிஸூக்கு உகந்த சூழல் இன்னும் உருவாகவே இல்லை என்றுதான் கூறுகிறார்.

Rohan Bopanna

சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில், “இந்தியாவில் மும்பையை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். வேண்டாம், மட்டுங்காவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அங்கிருக்கும் கிரிக்கெட் பயிற்சிக் கூடங்கள் எத்தனை எனக் கணக்கெடுங்கள். உறுதியாகச் சொல்கிறேன், ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருக்கக்கூடிய டென்னிஸ் பயிற்சி மையங்களை விட அது அதிகமாகத்தான் இருக்கும். அடிமட்ட அளவில் மறைந்து கிடக்கும் திறமைகளை அடையாளம் காண நாம் ஒன்றுமே செய்யவில்லை” என வேதனையோடு கூறியிருந்தார்.

பயஸூக்கு 30 ஆண்டுகள் டென்னிஸ் அனுபவம் இருக்கும். இந்த 30 ஆண்டுகளில் இங்கு எதுவும் மாறவில்லை. இந்த விளையாட்டின் மீதான கவனம் அப்போது எப்படியிருந்ததோ அப்படியேத்தான் இப்போதும் இருக்கிறது. ரோஹண் போபண்ணாவும் இந்தச் சூழலில் விதையாக முளைத்துப் போராடி வளர்ந்தவர்தான். 2000களின் தொடக்கத்திலேயே டென்னிஸ் ஆடத் தொடங்கிவிட்டார். சானியா மிர்சாவுடன் இணையாக பல போட்டிகளில் ஆடியிருக்கிறார். பாகிஸ்தானின் குரேஷியோடு இணைந்து ‘இந்தோ – பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்’ எனப் பெயரெடுக்குமளவுக்கு சிறப்பாக ஆடியிருக்கிறார். மகேஷ் பூபதியுடனும் கூட்டணி சேர்ந்திருக்கிறார். ஆனாலும் அவரின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல 15 ஆண்டுகளுக்கு மேல் பிடித்தது.

40 வயதை நெருங்கிக் கொண்டிருந்த தறுவாயில் 2017-ல்தான் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையே வென்றார். பிரெஞ்சு ஓப்பனில் கனடாவை கேப்ரியெல்லா தப்ரோவ்ஸ்க்கியுடன் இணைந்து அந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். வயதாகி விட்டது. கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கிறார். இப்போதாவது ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுவிட்டாரே என்கிற எண்ணம்தான் அத்தனை பேருக்கும் இருந்தது. அந்த 2017க்குப் பிறகு ரோஹண் போபண்ணாவும் சில சறுக்கல்களைச் சந்தித்தார். அவரின் இரண்டு முட்டியும் பலத்த அடிவாங்கியிருந்தது. எலும்பு முறிவு, தசைக்கிழிவு எனத் தொடர்ந்து அவதிப்பட்டார்.

Rohan Bopanna

“அந்த சமயத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தேன். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று வலிநிவாரண ஊசிகளை எடுத்துக் கொண்டேன். என் உடல் என்னுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லை. உடற்தகுதியை இழந்தேன். அப்போதுதான் கொரோனா பரவலும் ஆரம்பித்தது” எனத் தனது வலியை அவரே விவரித்திருக்கிறார்.

எப்படி கொரோனா போராட்டத்திலிருந்து உலகமே மீண்டெழுந்து இயங்க ஆரம்பித்ததோ அதேபோல போபண்ணாவும் மீண்டெழுந்து ஓடத் தொடங்கினார். 2023-ன் அமெரிக்க ஓபனில் இதே ஆஸ்திரேலியக்காரரான எப்டனுடன் சேர்ந்து இறுதிப்போட்டி வரை முன்னேறினார். அதே ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சாவின் விடைபெறும் போட்டியாக அமைந்த இறுதிப்போட்டியிலும் ஆடியிருந்தார். இறுதிக்கோட்டை அடிக்கடி நெருங்கினாலும் அந்தக் கோட்டை அவரால் வெற்றிகரமாகத் தாண்ட மட்டும் முடியவில்லை. ஆனாலும் அவர் ஓயவில்லை. 43 வயதிலும் மனம் தளராமல் அடுத்தடுத்து சிறப்பாக ஆடினார். இதே ஆஸ்திரேலிய ஓப்பனில் தனது கரியரின் 500வது வெற்றியை பதிவு செய்தார். இரட்டையர்கள் பிரிவில் உலகின் நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறினார். அத்தனை பேரும் போபண்ணாவை ஒரு முன்னோடியாக பார்க்கத் தொடங்கினார்.

“இவ்வளவு இளம் வயதில் நம்பர் 1 வீரராக ஆனதற்கு வாழ்த்துகள்!” என ஜோக்கோவிச் இன்ஸ்டாவில் இதயங்களை பறக்கவிட்டார். போபண்ணாவின் வெற்றியைப் பலரும் தங்களுடைய வெற்றியாக தங்களுடைய பயணத்தின் தங்களுடைய போராட்டத்தின் ஊக்கமாகப் பார்த்தனர்.

போபண்ணாவுமே தன்னுடைய வெற்றி டென்னிஸைத் தாண்டியிருக்கும் பலருக்கும் ஊக்கம் கொடுக்கக்கூடியதாக இருக்கும் எனக் கூறினார். தோண்டிக் கொண்டே இருக்கும்போது எதோ ஒரு இடத்தில் தங்கம் கிடைத்துதானே ஆக வேண்டும். போபண்ணாவுக்கு ஆஸ்திரேலிய ஓப்பனில் அந்தத் தங்கம் கிடைத்திருக்கிறது. அதிக வயதில் கிராண்ட்ஸ்லாமை வெல்லும் வீரர் எனும் அரிய சாதனையை படைத்திருக்கிறார்.

Rohan Bopanna

“எதற்கும் அவசரப்படாதீர்கள். காலக்கெடுவென இங்கே எதுவுமே இல்லை. நாம்தான் நமக்கான கட்டுப்பாடுகளை வரையறுத்துக் கொள்கிறோம். உங்களுக்கு பிடித்தவற்றை காதலித்து செய்யுங்கள். உங்களுக்கு சொல்லவிரும்பு செய்தி இதுதான். துவண்டுவிடாமல் எப்போதும் போராடுங்கள்” என ஆஸ்திரேலிய ஓப்பனை வென்றுவிட்டு போபண்ணா பேசியிருக்கிறார்.

வாழ்வின் ஒவ்வொரு தருணமும் நமக்கான பாடம்தான். எவ்வளவு வீழ்ந்தாலும் மீண்டெழலாம் என்பதற்கு போபண்ணா ஒரு மாபெரும் உதாரணம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *